வழிக்காட்டி பலகைகளில் இந்தி எழுத்துக்கள்.. மாநில நெடுஞ்சாலைத்துறை சொன்ன விளக்கம்..
Hindi Signboard: வைரலாகும் புகைப்படங்களில் குறிப்பிடப்படும் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், மதுரை - திண்டுக்கல் NH-44 தேசிய நெடுஞ்சாலையையும், மதுரை - திருச்சி NH-38 தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உட்பட்ட இணைப்புச் சாலை NH-744A என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 3, 2026: தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் இந்தி மொழியில் தகவல் பலகைகள் பயன்படுத்தப்படவில்லை என தகவல் நம்பகத்தன்மை பிரிவு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் – நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் கருமணி ஆற்றுப் பாலம் அருகே புதிதாக வழிகாட்டிப் பலகை ஒன்று அமைக்கப்பட்டது. அந்தப் பலகையில் தூத்துக்குடி, திருச்செந்தூர், ஆழ்வார்திருநகரி, திருநெல்வேலி உள்ளிட்ட ஊர்களின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் இடம்பெற்றிருந்தன. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாநில அரசை இந்தி திணிப்புக்கு துணை போவதாகக் கூறி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வழிகாட்டிப் பலகைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே இடம்பெறும் நிலையில், சாத்தான்குளம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பலகையில் இந்தி இடம்பெறக் காரணமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மதுரை அருகே வழிக்காட்டி பலகையில் இந்தி எழுத்துக்கள்:
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்காலிகமாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டதுடன், அந்த வழிகாட்டிப் பலகையில் இடம்பெற்றிருந்த இந்தி எழுத்துகள் உடனடியாக அகற்றப்பட்டதாகவும் மாநில நெடுஞ்சாலைத்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், மதுரை வாடிப்பட்டி மற்றும் அழகர்கோவில் பகுதிகளில் உள்ள வழிகாட்டிப் பலகைகளில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன. இதனால் மீண்டும் சர்ச்சை எழுந்தது.
மாநில நெடுஞ்சாலைத்துறை கொடுத்த விளக்கம்:
மாநில நெடுஞ்சாலைத் துறையின் பெயர் பலகைகளில் ஹிந்தி என பரவும் தவறான தகவல்
உண்மை என்ன ?
இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை அளித்துள்ள விளக்கத்தில், “செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சாலை, மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்டது கிடையாது.
மதுரை – திண்டுக்கல் ( NH-44 ) தேசிய… pic.twitter.com/Gbx8F8wFTc
— TN IID (@tn_factcheck) October 2, 2026
இதுகுறித்து தகவல் நம்பகத்தன்மை பிரிவு தனது எக்ஸ் பதிவில் விளக்கம் அளித்துள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறையின் பெயரில் இந்தி மொழிப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தவறானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வைரலாகும் புகைப்படங்களில் குறிப்பிடப்படும் சாலை மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், மதுரை – திண்டுக்கல் NH-44 தேசிய நெடுஞ்சாலையையும், மதுரை – திருச்சி NH-38 தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உட்பட்ட இணைப்புச் சாலை NH-744A என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. அடுத்த 7 நாட்களுக்கு எப்படி இருக்கும்?
எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில் இந்தி மொழியிலான தகவல் பலகைகள் பயன்படுத்தப்படவில்லை என தகவல் நம்பகத்தன்மை பிரிவு தெளிவுபடுத்தியுள்ளது.