தேனாம்பேட்டை மெட்ரோ அருகே தனியார் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து! மளமளவென பற்றி எரிந்த தீ..
Tenampet Fire Accident: சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தீயணைப்புப் போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் கட்டிட வளாகத்தில் இருந்த கழிவுப் பொருட்கள் பெருமளவில் எரிந்து சேதமடைந்தன. மேலும், அருகில் இருந்த கட்டிடத்தின் வெளிப்புறப் பகுதிகளிலும் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 3, 2026: சென்னை தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவன கட்டிடத்தில் இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்த குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களில் முதலில் தீப்பற்றியதாகவும், பின்னர் தீ வேகமாக கட்டிடத்திற்கும் அருகில் உள்ள கட்டிடத்தின் வெளிப்புறப் பகுதிக்கும் பரவியதாகவும் தீயணைப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து:
தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேனாம்பேட்டை மற்றும் சைதாப்பேட்டை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததால், தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.. அடுத்த 7 நாட்களுக்கு எப்படி இருக்கும்?
குறிப்பாக, நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லாத கட்டிட வளாகத்தில் பல்வேறு கழிவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் இருந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் தீ வேகமாக பரவுவதற்கு காரணமாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட தீ:
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற தீயணைப்புப் போராட்டத்திற்குப் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீ விபத்தில் கட்டிட வளாகத்தில் இருந்த கழிவுப் பொருட்கள் பெருமளவில் எரிந்து சேதமடைந்தன. மேலும், அருகில் இருந்த கட்டிடத்தின் வெளிப்புறப் பகுதிகளிலும் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும், தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: வழிக்காட்டி பலகைகளில் இந்தி எழுத்துக்கள்.. மாநில நெடுஞ்சாலைத்துறை சொன்ன விளக்கம்..
இந்த தீ விபத்தில் உயிரிழப்பு அல்லது காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. சேத மதிப்பு குறித்த முழுமையான விவரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தேனாம்பேட்டை போன்ற பரபரப்பான பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து அங்கு நிலைமை சீரடைந்தது.