ஆம்மாடியோவ் பெரம்பூரில் அதிர்ச்சி! இளைஞர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய ஊழியர்.. அம்மா உணவகத்தில் நடந்த கூத்து!
Perambur Amma Unavagam : பெரம்பூர் அம்மா உணவகத்தில் உணவு கேட்டு தொல்லை செய்த இளைஞர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய உணவக பெண் ஊழியரை பெரம்பூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அம்மா உணவகத்தில் உணவு வாங்க வந்த இளைஞர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய ஊழியரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டம், பெரம்பூர் பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தினந்தோறும் ஏராளமான மக்கள் பொதுமக்கள் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் குறைந்த விலையில் உணவு சாப்பிட்டு வருகின்றனர். இந்த அம்மா உணவகத்தில் உதயபானு என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அந்தப் பகுதியில் வசித்து வரும் ராஜேஷ் என்பவர் தினந்தோறும் அம்மா உணவகத்தில் உணவருந்த செல்வது வழக்கம் ஆகும். அதன்படி, இன்று சனிக்கிழமை ( நவம்பர் 21- ஆம் தேதி) வழக்கம்போல அம்மா உணவகத்துக்கு உணவருந்த சென்றார். அப்போது, உணவகத்தில் உணவு தயாரிக்கும் வேலையில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
அம்மா உணவகத்தில் உணவு கேட்டு வந்த இளைஞர்
அனைத்து உணவுகளும் தயாராகிக் கொண்டிருந்தது. இதற்கு முன்னதாகவே அம்மா உணவகத்துக்கு வந்த இளைஞர் ராஜேஷ் தனக்கு சீக்கிரமாக உணவு வேண்டும் என்று ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது, உணவு தயார் செய்யப்பட்டு வருகிறது. அதுவரை பொறுத்திருந்து உணவு வாங்கி செல்லுமாறு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இளைஞர் ராஜேஷ் எனக்கு அவசரமாக உணவு வேண்டும் என்று கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ராஜேஷுக்கும், உணவக ஊழியர் உதய பானுவுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
மேலும் படிக்க: கார்த்திகை தீபத்திருவிழா! திருவண்ணாமலை செல்லும் பக்தர்களே.. 8,012 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!
இளைஞர் மீது கொதிக்கும் சாம்பாரை ஊற்றிய ஊழியர்
இதில், கடும் ஆத்திரம் அடைந்த உணவக ஊழியர் உதய பானு அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரை பாத்திரத்தில் எடுத்து இளைஞர் ராஜேஷ் முகத்தில் ஆக்ரோஷத்தில் ஊற்றினார். இதில், அவர் சூடு தாங்க முடியாமல் அலறி துடித்தார். அத்துடன், அவரது முகம் நெஞ்சு பகுதி, கைகளில் தோல் வெந்து போனது. உடனே, அருகில் உணவருந்த வந்தவர்கள் ராஜேஷை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக பெரம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு ராஜேஷ் சிகிச்சை பெற்று வருகிறார்.
அம்மா உணவக பெண் ஊழியர் அதிரடி கைது
இதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பூர் காவல் நிலையத்தில் இளைஞர் ராஜேஷ் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அம்மா உணவகத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர் உதயபானுவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: அமைச்சரை கையை நீட்டி எச்சரித்தது ஏன்? மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு விளக்கம்!