அமைச்சரை கையை நீட்டி எச்சரித்தது ஏன்? மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரபரப்பு விளக்கம்!
Vaiko Explains Warning To Minister : போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை கையை காட்டி எச்சரித்த வீடியோ விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பரபரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தை விரிவாக பார்க்கலாம்.
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி. எஸ். பாபுவின் இறுதி ஊர்வலத்தின் போது, போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கையை காண்பித்து மிரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இது தொடர்பாக, வைகோ விளக்கம் அளித்துள்ளார். அதில், வி. எஸ். பாபு இறுதி ஊர்வலத்தின் போது, முதல்வர் விஜய் மீது துரும்பு கூட விழாத வகையில் சென்றேன். நான் கொடுக்கும் பாதுகாப்பு 100 பேராலும் கொடுக்க முடியாது. முதல்வருடன் நடக்கும்போது எனது கையைப் பிடித்து இழுத்தார்கள். அமைச்சரை பார்த்து நான் கை நீட்டி பேசவில்லை. அவர் அமைச்சர் என்றே எனக்கு தெரியாது. என் கையை பிடித்து இழுத்த நபரை உன் வேலைய பாத்துட்டு போ என்று தான் கூறினேன். நான் யாரையும் திட்டவில்லை.
யாரின் கையையும் பிடித்து இழுக்கவில்லை
யாரின் கையையும் பிடித்து இழுக்கவில்லை. இது அரசியலில் தவறா, ஊடகங்கள் திமுகவுக்கு ஏஜென்ட் வேலை பார்க்கின்றன. திராவிட இயக்கத்துக்கு பாதுகாப்பாக இருக்க திமுக கூட்டணியில் இணைந்தோம். எங்களை அவமானம் செய்தார்கள். திமுகவுடன் இருக்கக்கூடாது என்பதை மதிமுகவின் பொதுக்குழு முடிவு செய்து, கூட்டணியிலிருந்து வெளியேறினோம். கொள்கைக்காக தான் கூட்டணியை விட்டு வெளியேறினோம். பிரதமர் மோடி தனக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கிய போதும், தவறான முடிவுகளை எதிர்த்து கருத்து தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறினேன்.
மேலும் படிக்க: தவெக ஆட்சியில்.. மக்கள் உயிருக்கும் விவசாயிகள் பயிருக்கும் பாதுகாப்பில்லை.. டி.ஆர்.பி. ராஜா நேரடி தாக்கு!
சட்டம் ஒழுங்கு குறித்து விசாரிக்க திமுக தயாரா
முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தன்னை அண்ணன் என்று அழைத்ததன் காரணமாகவே அவரை நேரில் சந்தித்து பேசினேன். விஜய் நேர்மையான ஆட்சியை நடத்தி வருகிறார். ஊழல்வாதிகள் யாரும் அவரை நெருங்கி செல்ல முடியாது. சட்டம்- ஒழுங்கு குறித்து விவாதிக்க நான் தயாராக உள்ளேன். திமுக அதற்கு தயாராக இருக்கிறதா. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால தீர்ப்பு துரதிருஷ்டவசமானது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை இனி யாராலும் அழிக்க முடியாது. முன்னாள் முதல்வர் கருணாநிதி மதிமுகவை அளிக்க முயற்சி செய்தார்.
மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது
எங்களை இனி யாராலும் அழிக்கவே முடியாது. மேகதாது அணை விவகாரத்தில் முதலில் போராடியது நான் தான். தமிழகத்துக்கான முதலீடு ஆந்திர மாநிலத்துக்கு செல்லவில்லை என்று தெரிவித்தார். சென்னையில் நேற்று வி. எஸ். பாபுவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, முதல்வர் அருகே நின்று கொண்டிருந்த பாபுவின் உறவினரை அமைச்சர் தமிழன் பார்த்திபன் கையை நீட்டி அழைத்தார். அப்போது, வைகோ திடீரென அமைச்சரிடம் கையை நீட்டி எச்சரிக்கை விடுத்து பேசினார். இதுதான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கார்த்திகை தீபத்திருவிழா! திருவண்ணாமலை செல்லும் பக்தர்களே.. 8,012 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்!