தேர்தல் நடத்தை விதிமீறல்… சேலம் தவெக மாவட்ட செயலர் மீது வழக்குப்பதிவு… முழு விவரம் என்ன!
Salem Tvk : சேலம் மாவட்டத்தில் இப்தார் நிகழ்வில் பங்கேற்ற பொது மக்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டதாக சேலம் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியான மறு நிமிடமே தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. அதன்படி, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது. அவ்வாறு எடுத்துச் செல்லும் பட்சத்தில் அதற்கான உரிய ஆவணங்கள் உடன் வைத்திருக்க வேண்டும். வாக்காளர்களை கவரும் வகையில், பரிசு பொருள்கள், பணம் உள்ளிட்டவை வழங்க கூடாது, வேட்பாளர்கள் ரூ.40 லட்சம் வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தேர்தல் ஆணையம் மூலம் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, 2,160 தேர்தல் பறக்கும் படை மற்றும் வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்தார் நிகழ்வில் பொது மக்களுக்கு பரிச பொருள் விநியோகம்
இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டம், சூரமங்கலத்தில் இஸ்லாமிய சார்பில் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்று இருந்தனர். அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி இப்தார் நிகழ்வில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் உள்ளிட்டோருக்கு தவெக சார்பில் பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தினர் பரிசு பொருட்கள் வழங்கிய வீடியோ ஆதாரத்துடன் தேர்தல் அதிகாரிக்கு புகார் சென்றதாக தெரிகிறது.
மேலும் படிக்க: முருகன் பாடலை பாடி திருத்தணியில் பிரச்சாரத்தை தொடங்கிய சீமான்..




சேலம் தவெக மாவட்ட செயலர் உள்பட 3 பேர் மீது வழக்கு
அதன் அடிப்படையில், தேர்தல் அலுவலர் அளித்த புகாரின் பேரில், சேலம் மாவட்ட செயலாளர் பார்த்திபன் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே, கடந்த சில நாள்களுக்கு முன்பு திருச்செங்கோடு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக சில்வர் பாத்திரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
தவெக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட சில்வர் பாத்திரங்கள்
இந்த சோதனையில், அடுக்குமாடி குடியிருப்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர், கட்சியின் தலைவர் விஜய், நிர்வாகி அருண்ராஜ், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி, கட்சியின் விசில் சின்னம், பொதுச் செயலாளர் என். ஆனந்த், தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோரின் படம் பொறித்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஏராளமான பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில், சேலம் மாவட்டத்தில் பொது மக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கியதாக தவெகவினர் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல் 2026: திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு