AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது – ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து..

ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “கட்சி இரண்டாகப் பிரிந்தால் சின்னத்தை முடக்கி வைப்பதே நடைமுறை; குலுக்கல் முறையில் சின்னம் வழங்கப்படுவதில்லை” என தெரிவித்தார். அதே சமயம், அன்புமணி தரப்பு, “தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரப்படி மாம்பழச் சின்னம் அன்புமணி தரப்பிற்கே ஒதுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியது.

நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது – ராமதாஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி கருத்து..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 23 Mar 2026 17:20 PM IST

டெல்லி, மார்ச் 23, 2026: மாம்பழச் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரண்டு நாட்களுக்குள் சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்த மனு மீது மூன்று நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில், கடந்த பல மாதங்களாக தந்தை-மகன் இடையேயான அதிகாரப் போட்டி அதிகரித்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாகப் பிரிந்து தேர்தலை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான தரப்பு தனியாகவும், ராமதாஸ் தலைமையிலான தரப்பு தனியாகவும் செயல்பட்டு வருகின்றன.

அன்புமணி தரப்பு நடத்தும் ஆலோசனைக் கூட்டங்கள், மாவட்டச் செயலாளர் கூட்டங்கள், செயல்வீரர் கூட்டங்கள் அனைத்தும் மாமல்லபுரம் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றன. அதேபோல், ராமதாஸ் தரப்பு நடத்தும் கூட்டங்கள் அனைத்தும் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் 5 இடங்களை ஏற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்? இன்று இறுதி முடிவு..

மாம்பழ சின்னம் அன்புமணிக்கு – தேர்தல் ஆணையம்:

இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தரப்பில் அன்புமணிக்கு சாதகமாக பல்வேறு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதாவது, கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். மேலும், கட்சி தலைமையகமாக சென்னை அருகே உள்ள மாமல்லபுரம் அலுவலகமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாம்பழச் சின்னமும் அன்புமணி தரப்பிற்கே ஒதுக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்ந்த ராமதாஸ்:

இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது, இரு தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தனர்.

மேலும் படிக்க: அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 இடங்கள்.. பாமகவிற்கு 18 இடங்கள்..

ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “கட்சி இரண்டாகப் பிரிந்தால் சின்னத்தை முடக்கி வைப்பதே நடைமுறை; குலுக்கல் முறையில் சின்னம் வழங்கப்படுவதில்லை” என தெரிவித்தார். அதே சமயம், அன்புமணி தரப்பு, “தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரப்படி மாம்பழச் சின்னம் அன்புமணி தரப்பிற்கே ஒதுக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியது.

நீதிபதி சொன்ன கருத்து:

இரு தரப்பின் வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதி, “நீங்கள் கொடுக்கும் அழுத்தத்தில் மாம்பழம் ஜூஸ் ஆகிவிடக்கூடாது” என குறிப்பிட்டார்.

தொடர்ந்து, மாம்பழச் சின்னம் தொடர்பான விவகாரத்தில், இரு தரப்பும் இரண்டு நாட்களுக்குள் சிவில் நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும், அந்த மனுவிற்கு மூன்று நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, அடுத்த சில நாட்களில் மாம்பழச் சின்னம் யாருக்கு என்பதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாகப் பிரிந்து சந்திக்கும் சூழலில், அன்புமணி தரப்பிற்கு மாம்பழச் சின்னம் ஒதுக்கப்பட்டால், ராமதாஸ் தரப்பு பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை உருவாகும். அந்த சின்னம் தேர்தல் ஆணையம் மூலம் ஒதுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us