கோவை வரும் பிரதமர்.. தேஜ கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. என்ன பேசப்போகிறார் மோடி.. எகிரும் எதிர்பார்ப்பு!
PM Modi Visit Coimbatore : கோவை மாவட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த நிகழ்வில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது .
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், டெல்லி முதல்வர் ரேகா குப்தா உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுனர். இதே போல, திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, மற்றொரு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பிரச்சாரத்தை ஈடுவதற்காக தமிழகம் வருகை தர உள்ளனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே, மதுராந்தகம், திருச்சி, மதுரை, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார்.
கோவை பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி
தற்போது, 5- ஆவது முறையாக கோவை மாவட்டம், கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று சனிக்கிழமை ( ஏப்ரல் 18) நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்ற உள்ளார். இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு இன்று மாலை வந்தடைகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானத்தை சென்றடைகிறார்.
மேலும் படிக்க: டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு.. தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..




மாலை 5 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டம்
அங்கு, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அவரை வரவேற்கின்றனர். பின்னர் தேஜ கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பரபரப்பான தேர்தல் களத்தில் பிரதமர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சுமார் 5 மணியளவில் தொடங்கும் இந்த பொதுக்கூட்டமானது ஒரு மணி நேரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி பொது கூட்டத்தை முடித்துக் கொண்டு மீண்டும் சாலை மார்க்கமாக கோவை விமான நிலையத்தை சென்றடைகிறார். அங்கிருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
3 அடுக்கு பாதுகாப்பில் கோவை மாநகரம்
இந்த நிகழ்வில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமரின் நிகழ்ச்சிக்காக கோவை விமான நிலையம் முதல் பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா மைதானம் வரை சிறப்பு பாதுகாப்பு படை, மத்திய பாதுகாப்பு படை, மாவட்ட போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில், சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. பட்டாசு வெடித்து கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்.