ரூட்டை மாற்றும் தவெக தலைவர் விஜய்.. ஏப்ரல் 20-இல் சென்னையில் மெகா பிளான்.. என்ன அது!
TVK Leader Vijay Campaign : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டமிடும் பரப்புரை ரத்து செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையை மையமாக வைத்து வருகிற ஏப்ரல் 20- ஆம் தேதி முக்கிய திட்டத்தை விஜய் தீட்டி உள்ளார் .
தமிழகத்தில் கடந்த மார்ச் 15- ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அன்று முதல் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். அதன்படி, அவர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பிரச்சார பரப்புரை பயணத்தை தொடங்கினார். இதே போல, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, காரைக்குடி, திருப்பூர் ஆகியவற்றில் பிரச்சாரம் நடத்தி இருந்தார். அதிக அளவு மக்கள் கூட்டத்தால் விஜயால் பேச முடியாத நிலை ஏற்பட்டது. இதே போல, 72019 டி -நகர், ஆயிரம் விளக்கு, எழும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ரோடு ஷோ நடத்தி இருந்தார். ஆனால், வில்லிவாக்கம், புரசைவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் விஜய் திடீரென ரத்து செய்தார்.
பிரசாரம் ரத்துக்கு தவெக தலைமை அளித்த விளக்கம்
கரூர் சம்பவத்துக்கு பிறகு மாலை 6 மணிக்கு மேல் மக்களை சந்திப்பது மற்றும் பிரச்சாரம் மேற்கொள்வதை விஜய் தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை, கடலூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்த நிலையில் அந்த பிரச்சாரத்தையும் விஜய் அடுத்தடுத்து ரத்து செய்திருந்தார். கும்மிடிப்பூண்டியில் 19- ஆம் தேதி பிரச்சாரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: கரூரில் பரபரப்பு.. செந்தில் பாலாஜி நண்பர் வீடு – அலுவலகத்தில் திடீர் சோதனை.. அதிரடியாக களமிறங்கிய வருமான வரித்துறை!




கும்மிடிப்பூண்டியில் இரு முறை பிரசாரம் ரத்து
கும்மிடிப்பூண்டியில் 13- ஆம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை பிரச்சாரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில், மீண்டும் மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பிரச்சாரம் விஜய் தரப்பில் இருந்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் வருகிற ஏப்ரல் 20- ஆம் தேதி ( திங்கள்கிழமை) மீண்டும் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஏப்ரல் 20- ஆம் தேதியுடன் பரப்புரையை முடிக்க திட்டம்
அத்துடன், அதே நாளில் சென்னையில் உள்ள மற்ற தொகுதிகளிலும் பரப்புரை மேற்கொண்டு அத்துடன் தனது முழு பரப்புரை பயணத்தையும் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு வருகிற ஏப்ரல் 21 ( செவ்வாய்க்கிழமை) கடைசி நாளாகும். ஆனால், அதற்கு முன்னதாகவே விஜய் தனது பரப்புரையை நிறைவு செய்ய உள்ளார்.
மேலும் படிக்க: “தீய சக்தி திமுக” – விஜய் பாணியில் வெளுத்து வாங்கிய அண்ணாமலை.. அனல் பறந்த பேச்சு!