ராகுல் காந்தி – மு.க.ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ள வாய்ப்பில்லை.. ஆர்.எஸ்.பாரதி வைத்த அதிரடி ட்விஸ்ட்!
Rahul Gandhi: தமிழகம் வருகை தரும் ராகுல் காந்தியுடன், முதல்வர் மு. க. ஸ்டாலின் இணைந்து பிரசாரம் மேற்கொள்ளமாட்டார் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்குவதற்கு முன்பே திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்றும் 40 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க தொடங்கியது. அத்துடன் காங்கிரஸ் தலைமை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவை அமைத்து திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால், திமுக தலைமை அதற்கு செவி சாய்க்காமல் பேச்சுவார்த்தை குழுவை தாமதமாகவே அமைத்தது. அதன் பின்னர், திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு பேச்சு வார்த்தையை தொடங்கியது. இதில், இரு கட்சிகள் இடையே நீண்ட இழுபறி நீடித்து வந்தது. இதனால், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடிக்காது எனவும், தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைக்கும் எனவும் பரவலாக பேசப்பட்டு வந்தது.
தவெக கூட்டணி இல்லாததால் ராகுல் அதிருப்தி
இதற்கு அச்சாரமாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருங்கிய நபரான பிரவீன் சக்கரவர்த்தி விஜயை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். மேலும், தவெக- காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் கிரீன் சிக்னல் காண்பித்ததாக கூறப்படுகிறது. ஆனால், சோனியா காந்தி அதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதில், ராகுல் காந்தி அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, புதுச்சேரி மற்றும் கேரளா சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி வந்திருந்த போது, தமிழகத்துக்கு வருகை தரவில்லை.
மேலும் படிக்க: “அநீதி இழைத்தால் புரட்சி வெடிக்கும்!”.. தொகுதி மறுவரையறை விவகாரத்தில் செல்வப்பெருந்தகை எச்சரிக்கை




தமிழகத்தில் பிரசாரத்தை தவிர்க்கும் ராகுல் காந்தி
அத்துடன், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆதரவாகவும் ராகுல் காந்தி பிரச்சாரம் நடத்த வரவில்லை என்பது தற்போது வரை பேசும் பொருளாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சேலத்தில் திமுக கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்குமாறு ராகுல் காந்திக்கு திமுக தலைமை அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அதிருப்தி காரணமாக ராகுல் காந்தி அதை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகை தந்து பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ராகுல் காந்தி – மு. க. ஸ்டாலின் இணைந்து பிரசாரம் இல்லை
இதில், ராகுல் காந்தி மற்றும் மு க ஸ்டாலின் ஆகியோர் இணைந்து பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இருவரும் ஒன்றிணைந்து பிரச்சாரம் மேற்கொள்ள மாட்டார்கள் என்றும், திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் சுமார் 30 முதல் 40 தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால் கடைசி நேரத்தில் அவரது பிரச்சார அட்டவணையை மாற்ற முடியாது எனவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கேஸ் தட்டுபாடால் ஆட்டோ ஓட்டுநர்கள் அவதி.. பெரம்பூர் வேட்பாளர் திலகபாமா கொடுத்த வாக்குறுதி..