“தமிழ்நாட்டில் ‘கூட்டணி ஆட்சி’யையே மக்கள் விரும்புகின்றனர்”.. புயலை கிளப்பிய திருமாவளவன்!!
பாஜக போட்டியிட்ட 27 இடங்களில் 26 இடங்களில் அக்கட்சியை மக்கள் வீழ்த்தியுள்ளனர் என்றும், தாமரைச் சின்னத்தில் போட்டியிட்ட அனைவருமே தோல்வியைத் தழுவியுள்ளது மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறினார். மேலும், பாஜகவுடன் கைகோர்த்த காரணத்தினாலேயே அதிமுக தனது பலத்தை 47 இடங்களாக இழந்து, மக்கள் அளித்த படிப்பினையைச் சந்தித்துள்ளதாக அவர் விமர்சித்தார்.
சென்னை, மே 5: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தவெக ஆட்சி அமைக்க இன்னும் 10க்கும் மேற்பட்ட இடங்கள் தேவைப்படுகிறது. இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் தவெகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்த கேள்வி எழுப்பியபோது, மதச்சார்பற்ற அரசியல் களத்தில் இடதுசாரிகளுடன் இணைந்தே செயல்பட்டு வருகிறோம் என்று கூறிய அவர், எந்த முடிவாக இருந்தாலும் இணைந்தே எடுப்போம் எனவும் தெரிவித்தார். விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழக மக்களின் இந்த நுட்பமான தீர்ப்பு ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கம் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதையும் படிக்க: 2026 தேர்தல் களம்.. வீழ்ந்த திமுக கோட்டைகளும், அமைச்சர்களும்.. தவெகவின் வரலாற்று சாதனையும்..
சதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி:
முன்னதாக, சட்டப் பேரவை பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள திருமாவளவன், அதிமுக தலைமையிலான பாஜகவின் சதி அரசியலைத் தமிழக மக்கள் முறியடித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குக் கணிசமான வெற்றிகளைத் தந்த மக்களுக்குத் தனது மனமார்ந்த நன்றிகளை அவர் உரித்தாக்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காட்டுமன்னார்குடி மற்றும் திண்டிவனம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் குறிப்பாக, காட்டுமன்னார்குடி தொகுதியில் 33,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைக் குறிப்பிட்ட அவர், அத்தொகுதி எக்காலத்திலும் ‘சிறுத்தைகளின் தாய்மடி’ என்பதை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். மற்ற 6 தொகுதிகளிலும் கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு உழைத்த திமுக உள்ளிட்ட தோழமை கட்சித் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார் .
தவெக-வின் நிலை மற்றும் விசிகவின் வியூகம்:
தேர்தல் முடிவுகள்:
——————
சங் பரிவார்களின் வெறுப்பு அரசியலுக்கு இங்கே இடமில்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்!மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி முன்னெடுத்த மதச்சார்பின்மைக்கான அறப்போர் மாபெரும் வெற்றி!
விசிக முன்மொழிந்த கூட்டணி ஆட்சியை வழிமொழிந்துள்ள… pic.twitter.com/LCDeVR9doY
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 5, 2026
புதிதாகக் களம் கண்ட தமிழக வெற்றி கழகம் அதிக இடங்களில் வென்றிருந்தாலும், அவர்களுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல் மக்கள் முட்டுக்கட்டை போட்டுள்ளனர். “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை” என்கிற நிலையில் தவெகவை மக்கள் நிறுத்தியுள்ளனர். விசிக தனது பரப்புரையில் பாஜக மற்றும் அதிமுகவை அம்பலப்படுத்துவதிலேயே தீவிரம் காட்டியது. இதன் விளைவாக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் மதச்சார்பற்ற சக்திகளுக்கும், மாற்று சக்திகளுக்கும் பிரிந்து சென்று சங் பரிவார் அரசியலை வேரறுத்துள்ளது.
கூட்டணி ஆட்சியின் அவசியம்:
தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கூறுகையில், “தற்போதைய தீர்ப்பு தமிழகத்தில் கூட்டணி ஆட்சியையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை உணர்த்துகிறது. ஏற்கனவே விசிக கணித்தபடியே சட்டசபையில் தொங்குநிலை உருவாகியுள்ளது. தமிழக வெற்றி கழகத்திற்குத் தனிப் பெரும்பான்மையை வழங்காமல், மக்கள் மிக நுட்பமான ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளனர்.” இந்தத் தேர்தல் முடிவுகளின் மிக முக்கியமான அம்சம், எந்த ஒரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததுதான். 2016-ஆம் ஆண்டிலேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முன்மொழிந்த “கூட்டணி ஆட்சி” என்ற கருத்தாக்கத்தை, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தமிழக மக்கள் வழிமொழிந்துள்ளனர். ‘தொங்கு சட்டசபை’ உருவாகியுள்ள இந்தச் சூழல், தமிழக அரசியலில் ஒரு நுட்பமான மாற்றத்தை உணர்த்துகிறது.
பாஜக மற்றும் அதிமுகவின் வீழ்ச்சி:
பாஜக போட்டியிட்ட 27 இடங்களில் 26 இடங்களில் அக்கட்சியை மக்கள் வீழ்த்தியுள்ளனர் என்றும், தாமரைச் சின்னத்தில் போட்டியிட்ட அனைவருமே தோல்வியைத் தழுவியுள்ளது மதச்சார்பின்மைக்குக் கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறினார். மேலும், பாஜகவுடன் கைகோர்த்த காரணத்தினாலேயே அதிமுக தனது பலத்தை 47 இடங்களாக இழந்து, மக்கள் அளித்த படிப்பினையைச் சந்தித்துள்ளதாக அவர் விமர்சித்தார்.
வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை:
“எமது இலக்கு தமிழ் மண்ணில் மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதே. அதை மக்கள் ஏற்றுக்கொண்டனர். வலதுசாரி அரசியலின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது. இனி எக்காலத்திலும் சங் பரிவார்கள் இம்மண்ணில் வாலாட்ட இயலாது என்பது இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” எனத் திருமாவளவன் தனது அறிக்கையில் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: தனிப்பெரும்பான்மை இல்லாத தவெக.. ஆட்சி அமைக்க முடியுமா?.. தமிழக அரசியலில் காத்திருக்கும் புதிய திருப்பம்!!
சாதியவாத, மதவாத சக்திகளைப் புறக்கணித்து, மதச்சார்பற்ற கொள்கையைத் தாங்கிப் பிடித்த வாக்காளர்களுக்குத் தனது பாராட்டுகளையும் நன்றிகளையும் அவர் மீண்டும் ஒருமுறை சமர்ப்பித்துள்ளார்.