தனிப்பெரும்பான்மை இல்லாத தவெக.. ஆட்சி அமைக்க முடியுமா?.. தமிழக அரசியலில் காத்திருக்கும் புதிய திருப்பம்!!
Tamilnadu Election Result; தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இன்று சென்னை வரவுள்ள நிலையில், ஆட்சி அமைப்பது குறித்து அவர் இரண்டு முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவர் விஜய்யை அழைத்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூறலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் 59 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைந்துள்ளது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தனது முதல் தேர்தலிலேயே பெரும் வெற்றியைப் பெற்றுள்ள போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை பெறுவதில் ஒரு இழுபறி நிலை நீடிக்கிறது. தமிழகத்தின் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், ஒரு கட்சி ஆட்சி அமைக்க 118 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், தற்போதைய நிலவரப்படி தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதையும் படிக்க: முதல் தேர்தலிலேயே 108 இடங்களை பிடித்த தவெக.. 73 இடங்களுடன் எதிர்க்கட்சியான திமுக..
விஜய் ராஜினாமா செய்ய வேண்டும்:
மேலும், தவெக தலைவர் விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால், அவர் விதிகளின்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதோடு, அக்கட்சியைச் சேர்ந்த ஒருவரை சபாநாயகராக நியமிக்க வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சபாநாயகர் வாக்களிக்க முடியாது என்பதால், தவெகவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதலாக 12 உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் தேவைப்படுகிறது.
கூட்டணி ஆதரவு குறித்த எதிர்பார்ப்புகள்:
தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழலில், பிற கட்சிகளின் ஆதரவை தவெக நாட வேண்டியிருக்கும். அரசியல் வட்டாரத் தகவல்களின்படி, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் (5 இடங்கள்), இரு கம்யூனிஸ்டு கட்சிகள் தலா 2 இடங்கள் (4 இடங்கள்), இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (2 இடங்கள்), விசிக (2 இடங்கள்) மற்றும் தேமுதிக (1 இடம்). அதிமுக கூட்டணியில் உள்ள பாமக (4 இடங்கள்), பாஜக (1 இடம்) மற்றும் அமமுக (1 இடம்). இந்த அனைத்து கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் தவெகவின் பலம் 128 ஆக உயரும். எனினும், ஆட்சி அமைக்கத் தேவையான 12 உறுப்பினர்களின் ஆதரவு கிடைப்பதே அக்கட்சிக்கு போதுமானதாக இருக்கும்.
ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள்:
தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இன்று சென்னை வரவுள்ள நிலையில், ஆட்சி அமைப்பது குறித்து அவர் இரண்டு முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக தலைவர் விஜய்யை அழைத்து சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கக் கூறலாம் அல்லது, தவெகவுக்கு ஆதரவு தரும் பிற கட்சிகளின் கடிதங்களை சமர்ப்பிக்கக் கோரி, அதன் அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை வழங்கலாம்.
இதையும் படிக்க: சென்னை மற்றும் வட மாவட்டங்களில் எடுபட்ட தவெக ஃபார்முலா.. டெல்டா மாவட்டங்களிலும் கைகொடுத்ததா?
ஒருவேளை பெரும்பான்மை கிடைக்காவிட்டால்?
தவெகவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனால், அடுத்தபடியாக அதிக இடங்களைப் பெற்றுள்ள திமுகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார். அவர்களாலும் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படும். அதனைத் தொடர்ந்து அடுத்த 6 மாதங்களுக்குள் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்தப்படும். தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு கூட்டணி ஆட்சி மலருமா அல்லது மீண்டும் தேர்தல் நடத்தப்படுமா என்பதை ஆளுநரின் முடிவும், சிறிய கட்சிகளின் நிலைப்பாடும் தீர்மானிக்க உள்ளது.