“இன்னும் 4 நாட்களில் அனைத்தும் தெரியும்”.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த இபிஎஸ் பளீர்!!
கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் குறித்துப் பேசிய அவர், "எங்களுக்குள் எந்தப் போட்டியும் இல்லை. எந்தெந்தத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறதோ, அந்தத் தொகுதிகளை அவர்களுக்கு ஒதுக்குவதே எங்களது நோக்கம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறோம்" என்றார்.
டெல்லி, மார்ச் 20: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றிரவு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து, இன்றைய தினம் டிடிவி தினகரனும், அன்புமணி ராமதாஸும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால், இறுதி பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் டெல்லி அழைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுடன் அமித்ஷா இன்றைய தினம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிக்க : அதிமுகவினரை திமுகவில் இணைப்பதற்கு திடீர் தடை… பாஜகவை மனதில் வைத்து தலைமை உத்தரவு? முழு விவரம் என்ன!
NDA கூட்டணியில் குழப்பங்கள் கிடையாது:
இதனிடையே, அமித்ஷா உடனான ஆலோசனைக்கு பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது, அதிமுக கூட்டணியில் எந்தவிதமான சிக்கலும் இல்லை. திமுக கூட்டணியில் நடப்பது போன்ற குழப்பங்கள் இங்கு கிடையாது. நாங்கள் அமைதியாகவும், அற்புதமாகவும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறோம். இன்னும் சரியாக நான்கு நாட்களில் அனைத்து விவரங்களும் முறைப்படி அறிவிக்கப்படும்” என்று உறுதியாகத் தெரிவித்தார்.




234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு:
தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, “அதிமுக 31 ஆண்டுகாலம் தமிழகத்தை ஆட்சி செய்த அனுபவம் மிக்க கட்சி. பல தேர்தல்களைச் சந்தித்துள்ளோம். எங்களைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடுதான் தேர்தலைச் சந்திக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
விட்டுக்கொடுத்து செல்வோம்:
கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் குறித்துப் பேசிய அவர், “எங்களுக்குள் எந்தப் போட்டியும் இல்லை. எந்தெந்தத் தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறதோ, அந்தத் தொகுதிகளை அவர்களுக்கு ஒதுக்குவதே எங்களது நோக்கம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறோம்” என்றார்.
நான்கு முனைப் போட்டி:
தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக, திமுக, விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுவது குறித்துக் கேட்டபோது, “கள நிலவரத்தை நீங்கள்தான் (ஊடகங்கள்) கணிக்க வேண்டும். டெல்லியில் இருந்து தமிழக நிலவரத்தைக் கேட்டு எங்களுக்குத் தகவல் சொல்லுங்கள்” என நகைச்சுவையாகப் பதிலளித்தார்.
புதிய கட்சிகளின் வருகை:
“கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதா?” என்ற கேள்விக்கு, “ஏற்கனவே பெரும்பாலான கட்சிகள் தங்களது நிலப்பாட்டை எடுத்துவிட்டன. திமுகவோடு சேர வேண்டியவர்கள் அங்கு சென்றுவிட்டனர், அதிமுகவோடு இருப்பவர்கள் இங்கு இருக்கிறார்கள். இனி தேர்தல் நோக்கிய பயணம்தான்” என்று விளக்கமளித்தார்.
இதையும் படிக்க: சட்டமன்ற தேர்தல் 2026: திரள் நிதி மூலம் உதவ வேண்டும் – சீமான் வெளியிட்ட வீடியோ
பிரதமர் மோடியின் வருகை:
தேர்தல் பிரச்சாரம் குறித்துப் பேசுகையில், “பாரதப் பிரதமர் ஏற்கனவே திருச்சி, மதுரை, மதுராந்தகம் என மூன்று முறை தமிழகத்திற்கு வந்து பிரம்மாண்டமான கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் தமிழகத்திற்கு வருவார். அவரது பயணத் திட்டம் குறித்து முறைப்படி அறிவிக்கப்படும்” என்று கூறினார்.