இறுதியாகும் பாஜக – அதிமுக தொகுதி பங்கீடு.. மீண்டும் டெல்லி சென்ற இபிஎஸ்..!
Eps Leaves For Delhi: தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசுகிறார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது வரை தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கப்படவில்லை. இந்த நிலையில், தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடர்பான இறுதி முடிவு எடுப்பதற்காக மத்திய அமைச்சரும், பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அவர், சென்னை பசுமை வழி சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து கார் மூலம் சென்னை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து அதிமுக- பாஜக தொகுதிகளை இறுதி செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
அதிமுகவிடம் 30 தொகுதிகள் எதிர்பார்க்கும் பாஜக
அதிமுகவிடம், பாஜக 30 தொகுதிகளுக்கும் மேல் எதிர்பார்த்தது. ஆனால், அதிமுக 28 தொகுதிகள் மட்டுமே தரம் முன் வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டு வந்தது. இதே போல, பாட்டாளி மக்கள் கட்சிக்கு 17 தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு 8 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 2 தொகுதிகள், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக முன்னேற்ற கட்சி உள்ளிட்டவற்றுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அதிமுகவினர் திமுகவில் இணைவதற்கு திடீர் தடை… பாஜகவை மனதில் வைத்து தலைமை உத்தரவு? முழு விவரம் என்ன!




தாமரை சின்னத்தில் போட்டியிட கூறும் பாஜக
மேலும், சிறிய கட்சிகளை பாஜக தனது சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிடுவதற்கு வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அந்தக் கட்சிகள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு விரும்புவதாக தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டு தெளிவான முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் விரைவில் தொகுதி பங்கீடு
இதைத் தொடர்ந்து, எடப்பாடி கே. பழனிசாமி தமிழகம் திரும்பியவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை தொடங்கி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர், தொகுதி பங்கீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்து இடப்படும். தொடர்ந்து, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தி தங்களுக்கான தொகுதிகள் தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: mano thangaraj Tamil Nadu Election: அடுத்தடுத்து வெற்றி… பத்மநாபபுரம் தொகுதியில் முத்திரை பதிப்பாரா டி.மனோ தங்கராஜ்!