காருக்குள் விளையாடிய போது நேர்ந்த சோகம்.. கதவு தானாக மூடிக்கொண்டதால் 9 வயது சிறுவன் மூச்சுத்திணறி பலி!!
Tragic Incident Near Sirumugai: கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் விளையாடிய 9 வயது சிறுவன், காரின் கதவு தானாக மூடிக்கொண்டதால் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, ஆகஸ்ட் 09: குழந்தைகள் விளையாடும் தருணங்களில் அவர்களை சற்று கவனக் குறைவாக விட்டால் கூட பெரும் அசம்பாவிதங்கள் நேர்ந்துவிடும் என்பதற்குச் சான்றாகக் கோவை மாவட்டத்தில் ஒரு நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிறுமுகை அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள் விளையாடச் சென்ற 9 வயது சிறுவன், காரின் கதவு தானாகப் பூட்டிக்கொண்டதால் வெளியே வர முடியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்த சோகச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: கடலூரில் பெருஞ்சோகம்.. குளிக்க சென்ற மாணவி தீக்குளித்த தற்கொலை.. போலீசார் தீவிர விசாரணை!
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நிகழ்ந்த அசம்பாவிதம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகையை அடுத்த பெத்திக்குட்டை – இரும்பறை சாலையில் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருபவர் வேலுமணி. இரும்பறை ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராகப் பணியாற்றி வரும் இவருக்கு, சுமதி என்ற மனைவியும், 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மகளும், 4-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது மகன் முகுந்தும் உள்ளனர். வழக்கம்போல வேலுமணி பணிக்கும், மகள் பள்ளிக்கும் சென்றுவிட, சுமதி அருகில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீட்டில் பாட்டியும் சிறுவன் முகுந்தும் மட்டுமே இருந்த நிலையில், பாட்டி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார. அப்போது, வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவைத் திறந்து சிறுவன் முகுந்த் உள்ளே ஏறி விளையாடத் தொடங்கியுள்ளான்.
கதவு தானாக மூடிக் கொண்டதால் ஏற்பட்ட மூச்சுத்திணறல்:
சிறுவன் காருக்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக காரின் கதவுகள் தானாக மூடிப் பூட்டிக்கொண்டன. பாட்டியும் தூங்கிக் கொண்டிருந்ததால் சிறுவன் காருக்குள் சிக்கியதை யாராலும் கவனிக்க முடியாமல் போயுள்ளது. சிறிது நேரம் கழித்து வீட்டிற்குத் திரும்பிய தாய் சுமதி, காருக்குள் சிறுவன் முகுந்த் மயங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறியுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியோடு காரை திறந்து சிறுவனை மீட்டு, சிறுமுகையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
மேலும் படிக்க: பழனி நில முறைகேடு வழக்கு குற்றவாளி சிறை மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.. தவாக வேல்முருகன்!
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பறிபோன உயிர்:
தனியார் மருத்துவமனையில் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக உடனடியாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு மாணவன் கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனைப் பரிசோதித்த தீவிர சிகிச்சை மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துச் சிறுமுகை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையிலான போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விளையாடச் சென்ற சிறுவன் காருக்குள் மூச்சுத்திணறி பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.