இனி வாக்காளர் தகவல் சீட்டுதான்… பூத் சிலிப் கிடையாது… என்ன காரணம்!
T N Assembly Elections : தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வாக்காளர் சீட்டுகளுக்கு (பூத் சிலிப்) பதிலாக வாக்காளர் தகவல் அட்டை வழங்கப்பட இருப்பதாக தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகள் தேர்தல் ஆணையம் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வாக்குப் பதிவின்போது, வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் வரிசை என்னை தெரிந்து கொள்வதற்காக வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள சீட்டு ( பூத் சிலிப்) வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் சீட்டுக்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட் வழங்க இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வாக்காளர்கள் தகவல் சீட்டில், வாக்குச்சாவடியின் பெயர், வாக்குப்பதிவு நடைபெறும் நாள், வாக்குப்பதிவு தொடங்கி முடிவடையும் நேரம் ஆகிய தகவல்கள் அதில் இடம் பெற்றிருக்கும். இந்த வாக்காளர் தகவல் சீட்டானது வாக்குப்பதிவு நடைபெறும் நாளைக்கு 5 நாட்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் வழங்கப்படும்.
அடையாள ஆவணமாக ஏற்றுக் கொள்ள முடியாது
இந்த வாக்காளர் தகவல் சீட்டை தங்களது அடையாளத்தை காண்பிக்கும் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு வாக்காளர் மற்றொரு தொகுதியின் அடையாள அட்டையை வைத்திருக்கும் பட்சத்தில், அந்த அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் குறிப்பிடும் ஆவணமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், அந்த வாக்காளரின் பெயர், அவர் வாக்களிக்க சென்றுள்ள வாக்குச்சாவடி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 12 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒரு ஆவணத்தை வைத்திருப்பதால் மட்டும் தங்களது வாக்கை செலுத்தி விட முடியாது.
மேலும் படிக்க: நமது தலைமையில் தான் ஆட்சி.. அவதூறுகளை நம்ப வேண்டாம் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்..




வாக்கை செலுத்த தகுதி உடைய நபர்
இதில், வாக்காளரின் பெயர் மற்றும் வாக்குப்பதிவு செய்ய உள்ள வாக்குச்சாவடி வாக்காளர் பட்டியலில் கண்டிப்பாக இடம் பெற்று இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் சம்பந்தப்பட்ட வாக்காளர் தங்களது வாக்கை செலுத்த தகுதி உடைய நபர் ஆவார். இந்தியாவில் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 20 ஏ-இன் கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள், வாக்களித்து செல்லும் வாக்குச்சாவடிகளில் அவர்களின் அசல் பாஸ்போர்ட்டில் உள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, வேறொரு அடையாள ஆவணமும் இன்றி அவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட வேண்டும்.
12 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை…
இதே போல, சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெற்றுள்ள வாக்காளர்கள், தங்களது அடையாளத்தை காண்பிக்கும் வகையில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 12 புகைப்படம் உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து தங்களது வாக்கை பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட் நாயக் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: சட்டமன்ற தேர்தல் 2026: திரள் நிதி மூலம் உதவ வேண்டும் – சீமான் வெளியிட்ட வீடியோ