திமுகவுடன் சின்னம் தொடர்பான சர்ச்சை – என்ன முடிவெடுக்கப்போகிறார் கமல்?
MNM Wants Own Symbol : சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி இடையே 2 ஆம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மார்ச் 19, 2026 அன்று நடைபெற்றன. இதில் சின்னம் தொடர்பாக இரண்டு கட்சிகளுக்கு இடையே சிக்கல் நீடிக்கிறது.
சென்னை, மார்ச் 19 : திமுக – மக்கள் நீதி மய்யம் கட்சிகளுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை மார்ச் 19, 2026 அன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், திமுக சின்னத்தில் போட்டியிட தங்களிடம் கேட்டதாகவும், ஆனால் நாங்கள் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. திமுகவில் சமீபத்தில் இணைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிவிருக்கும் தொகுதி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நேர்காணலில் பங்கேற்றார்.
மக்கள் நீதி மய்யம் – திமுக இடையே சின்னம் தொடர்பான சர்ச்சை
அந்த வகையில் மார்ச் 19, 2026 அன்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நிலையில் இது குறித்து பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் ஏற்கனவே முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. திமுக தரப்பில் இரு்து தொகுதிகள் வழங்கப்பட்டன.
இதையும் படிக்க : mano thangaraj Tamil Nadu Election: அடுத்தடுத்து வெற்றி… பத்மநாபபுரம் தொகுதியில் முத்திரை பதிப்பாரா டி.மனோ தங்கராஜ்!




மேலும் சின்னம் தொடர்பாகவும் எங்களிடம் கேட்கப்பட்டது. தொகுதிகளை பொறுத்தவரை எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் திமுக சின்னத்தில் போட்டியிட வேண்டும் என எங்களிடம் கேட்டார்கள். கடந்த தேர்தலில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட்டு சராசரியா 4 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளோம். மக்களிடம் எங்கள் டார்ச் லைட் சின்னம் சென்றடைந்துள்ளது. எங்களுடைய தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று வலியுறுத்தினோம். அதற்கான எல்லாம் காரணங்களையும் நாங்கள் தெரிவித்திருக்கிறோம். தொகுதி பங்கீடு எந்த பிரச்னையும் இன்றி சுமூகமாக செல்கிறது. அதில் சிக்கல் ஏதும் இல்லை என்றார்.
இதையும் படிக்க : அதிமுகவினரை திமுகவில் இணைப்பதற்கு திடீர் தடை… பாஜகவை மனதில் வைத்து தலைமை உத்தரவு? முழு விவரம் என்ன!
மேலும் பேசிய அவர், இது தொடர்பாக எங்கள் தலைவரிடம் கலந்து பேசி முடிவெடுப்போம். இதற்காக விரைவில் கட்சியின் செயற்குழு கூட்டி இது சம்பந்தமாக பேசி தலைவர் என்ன சொல்கிறாரோ அதனை அறிந்து செயல்படவிருக்கிறோம்.சின்னம் தொடர்பாக ஓரிரு நாட்களில் மீண்டும் உங்களை சந்திப்போம் என்று தெரிவித்தார். இதனையடுத்து திமுக – மநீம கட்சிகளுக்கு இடையே தொகுதிகள் தொடர்பான உடன்பாடு இருநதாலும், போட்டியிடும் சின்னம் தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இதனையடுத்து கமல்ஹாசன் என்ன முடிவெடுக்கப்போகிறார் என அக்கட்சியின் தொண்டர்களும், திமுகவும் காத்திருக்கின்றன. இது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.