திருவண்ணாமலையில் 53 வெண்கல சுவாமி சிலைகள் கடத்தலா? தேர்தல் பறக்கும் படை விசாரணை!
53 Statues Seized In Tiruvannamalai : தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் காரில் கொண்டு சென்ற 53 வெண்கல சுவாமி சிலைகளை நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் .
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதில், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டு சென்று வழங்குவதை கண்காணித்து தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் 2,160 பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேட்டவலம்- திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள வேளானந்தல் பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், காரின் உள்ளே 53 வெண்கல சுவாமி சிலைகள் இருந்தது தெரியவந்தது.
உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட சுவாமி சிலைகள்
இதைத் தொடர்ந்து, காரில் வந்த நபரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், அவரது பெயர், ஜீனைத் பரூக் என்பதும், சுவாமி சிலைகளுக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாமல் இருப்பதும் தெரிய வந்தது. பின்னர், அந்த சுவாமி சிலைகளை நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதே போல, திருக்கோவிலூர் சாலையில் வெறையூர் என்ற பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.
மேலும் படிக்க: போதை இல்லாத தமிழ்நாடு’ சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கப்படுமா?




40 அரசி மூட்டைகள் பறிமுதல்
அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், 40 அரிசி மூட்டைகள் இருந்தது தெரிய வந்தது. ஆனால், அதற்கான உரிய ஆவணங்கள் அந்த ஆட்டோவை இயக்கி வந்த ஓட்டுநரிடம் இல்லை. இதன் காரணமாக, அந்த 40 அரிசி மூட்டைகளையும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றை கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலால் உதவி ஆணையருமான செந்தில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தமிழகத்தில் ரூ.42 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்
மேலும், இந்த இரு சம்பவங்களில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறு நிமிடமே தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தற்போது வரை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரூ. 42.65 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறும் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: நமது தலைமையில் தான் ஆட்சி.. அவதூறுகளை நம்ப வேண்டாம் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்..