மார்ச் 19, 2026: 2026 சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள சூழலில், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் அதற்கான பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றன. ஏறக்குறைய 95% கூட்டணிகள் உறுதியான நிலையில், சில கட்சிகள் மட்டுமே தங்களது கூட்டணி நிலைப்பாடுகளை இதுவரை அறிவிக்காமல் உள்ளன. குறிப்பாக, ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சசிகலா ஆகியோர் தங்களது கூட்டணி நிலைப்பாடுகளை இன்னும் சில நாட்களில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சசிகலா – ராமதாஸ் அரசியல் நகர்வு:
இந்த சூழலில், சசிகலா மற்றும் ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த கூட்டணி ஏறக்குறைய முடிவடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொருத்தவரை, கடந்த சில மாதங்களாக தந்தை-மகன் கருத்து வேறுபாடு காரணமாக இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, அன்புமணி தரப்பு பாமக தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க: 5 முறை வெற்றி.. 2 முறை தோல்வி… ராயபுரத்தில் வெற்றிக் கனியை தட்டி பறிப்பாரா ஜெயக்குமார்!
அதே சமயம், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா பலமுறை கட்சி ஒன்றிணைய வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில், நீக்கப்பட்ட யாரும் மீண்டும் கட்சியில் சேர முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 24ஆம் தேதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கமுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், சசிகலா புதிய கட்சி தொடங்க இருப்பதாக அறிவித்தார்.
புதிய கட்சியை தொடங்கிய சசிகலா:
அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற புதிய கட்சியை சசிகலா தொடங்கினார். தேர்தலை சந்திக்க அவர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சசிகலா சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இருவரும் கூட்டணி அமைக்க திட்டமிட்டு, அதற்கான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராமதாஸ் – சசிகலா கூட்டணி பேச்சுவார்த்தை:
ராமதாஸ் தரப்பு பாமக கடந்த சில தினங்களாக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு யாருடன் கூட்டணி என்பது குறித்து அறிவிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த சூழலில், சசிகலாவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அது ஏறக்குறைய முடிவடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 40 தொகுதிகளில் ராமதாஸ் தரப்பு பாமக போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: விசில் ஊதியப்படியே நடனமாடிய மாணவி.. மேடையிலேயே பிடுங்கிய அதிகாரி..
முதலில், ராமதாஸ் மற்றும் சசிகலா இருவரும் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தினர் என தகவல்கள் வெளியானது. ஆனால், கட்சியின் சார்பில் சிடிஆர் நிர்மல் குமார், “யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறவில்லை; தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தற்போது ராமதாஸ் மற்றும் சசிகலா இருவரும் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும், இன்னும் ஒரு அல்லது இரண்டு நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பாமக வாக்குகளைப் பிரிப்பதற்காக ராமதாஸ் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.