நாதக ஆட்சியில் அனைவருக்கு அரசு வேலை… அதிரடியான தேர்தல் வாக்குறுதி… சீமான் வெளியிட்டார்!
N.T.K Election Manifesto : தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படுவதுடன் , தமிழகத்தில் 5 தலை நகரங்கள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார் .
சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை ( மார்ச் 19) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் 5 தலை நகரங்கள் அமைக்கப்படும். இதில், திருச்சி நிர்வாக தலைநகரமாகவும், சென்னை தொழில்நுட்ப தலை நகரமாகவும், கோயம்புத்தூர் தொழில் வணிக தலைநகரமாகவும், மதுரை தொழில், கலை, மற்றும் பண்பாட்டு தலைநகரமாகவும், கன்னியாகுமரி தமிழர் மெய்யியல் தலைநகரமாகவும் மாற்றப்படும். தமிழ் தேசிய மரமாக பனைமரம் அறிவிக்கப்படும். நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறையை வலியுறுத்தப்படும். பெண்களுக்கு தனி தொகுதி உருவாக்கப்படும். தமிழகத்தில் மக்கள் தொகை 4 மடங்காக உயர்ந்துள்ள நிலையில், 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு நாடாளுமன்ற தொகுதி உருவாக்கப்படும்.
அனைவருக்கும் அரசு வேலை
தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறை அமைக்கப்படும். தேர்தலில் வாக்களிப்பது கட்டாய கடமையாக மாற்றப்படும். 100 சதவீத வாக்குப் பதிவை உறுதி செய்வதற்காக வாக்களித்த சான்று இருந்தால் மட்டுமே அரசின் சலுகைகள் கிடைக்கும் என்று அறிவிக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதில் மீண்டும் வாக்கு சீட்டு முறை கொண்டு வரப்படும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்படும். குடிநீர் என்பது விற்பனை பொருள் அல்ல. அது ஒரு உயிர் தேவை என்பதால் அதனை விற்பதற்கு தடை விதிக்கப்படும். கடலில் வீணாக கலக்கும் 2, 300 டி. எம். சி. மழை நீரை சேமிக்க திட்டங்கள் வகுக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்.
மேலும் படிக்க: Tamil Nadu Election: தமிழகத்தில் உறுதியானது நான்கு முனை போட்டி.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!!




தமிழகத்தை மாற்றி படைக்க வேண்டும்
நிகழ்வில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், தமிழகத்தை மாற்றி படைக்க வேண்டும் என்ற கனவு எங்களிடம் உள்ளது. அந்த கனவை தேர்தல் அறிக்கையாக உங்களது கைகளில் சமர்ப்பித்துள்ளோம். நாம் தமிழர் கட்சி ஆட்சியில் கல்வி, மருத்துவம், வேளாண்மை, பசுமை பொருளாதாரம், வேலைவாய்ப்பு பெருக்குவது, வறுமை மற்றும் ஏழ்மை இல்லா தமிழகத்தை எப்படி மாற்றுவது இவை அனைத்தையும் காணொளியாக சமர்ப்பித்துள்ளோம். விமர்சன அரசியலை தாண்டி ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்க விரும்புகிறோம்.
சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியப்படுத்துவதே புரட்சியாகும்
நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்த கருத்துக்களை அனைவரும் தெரிவிக்கலாம். கடந்த தேர்தலில் நான் வெளியிட்ட தேர்தல் அறிக்கை அனைவரையும் சென்றடையவில்லை. அதில், சாத்தியம் இல்லாததை சீமான் கூறி இருப்பதாக கூறினர். ஆனால், தற்போதைய தேர்தல் அறிக்கையில் சாத்தியம் இருக்க கூடிய விஷயங்களை சாத்தியம் இருப்பதாக நான் எடுத்து கூறுவேன். சாத்தியமில்லாத ஒன்றை சாத்தியப்படுத்துவதே புரட்சியாகும்.
மேலும் படிக்க: இந்தி திணிப்பை எதிர்த்து போராடியவர் உயிரிழப்பு.. “இனி ஒரு உயிரும் போக வேண்டாம்”.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..