தவெக தலைவர் விஜய்க்கு எதிர்ப்பு… ஜூலி மீது வழக்கு… பின்னணியில் நடந்தது என்ன!
TVK Leader Vijay : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு எதிராக சென்னை மெரீனா கடற்கரையில் அனுமதியின்றி திமுகவுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டதாக சின்னத்திரை நடிகையும், ஜல்லிக்கட்டு பிரபலமுமான ஜூலி மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த 2016- ஆம் ஆண்டு சென்னை மெரீனாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, பிரபலமானவர் சின்னத்திரை நடிகை ஜூலி. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் தெரிவித்திருந்த குட்டி கதையை விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மிரட்டல் விடுத்து வருவதாக ஜூலி வீடியோவை வெளியிட்டு இருந்தார். மேலும், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்க்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய போவதாக அதை வீடியோவில் ஜூலி தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஜூலிக்கு தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
தவெக விஜய்க்கு எதிராக ஜூலி போராட்டம்
இந்த நிலையில், சின்னத்திரை நடிகை ஜூலி நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அவ்வையார் சிலை பின்புறம் சர்வீஸ் சாலையில் திடீரென அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, தனது கைகளில் திமுகவுக்கு ஆதரவாகவும், தமிழக வெற்றி கழகத்திற்கு எதிர்ப்பாகவும் பேனர்களை கையில் வைத்துக்கொண்டு போராட்டத்தை நடத்தி வந்தார். அவருடன் 3 பேர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஜூலி வைத்திருந்த பதாகையில் திமுகவுக்கு வாக்களியுங்கள் என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு பதாகையில் அணில் படம் பொறிக்கப்பட்டு அதன் மீது எக்ஸ் குறி குறிக்கப்பட்டிருந்தது.
மேலும் படிக்க: உதயநிதி சொத்து விவகார வழக்கு.. வருமான வரித்துறைக்கு பறந்த உத்தரவு.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!




ஜூலியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை
பெண்களுக்கு தமிழக வெற்றி கழகத்தினரால் பாதுகாப்பு இல்லை என்ற வாசகமும் அந்த பதாகையில் இடம் பெற்றிருந்தது. இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்த மெரினா போலீசார் விரைந்து சென்று ஜூலியை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதி இன்றி திடீரென போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று போலீசார் அறிவுறுத்தல்கள் வழங்கினார். மேலும், தேர்தல் அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஜூலி உள்பட 4 பேர் மீது வழக்கு
இதில், போலீசார் மற்றும் ஜூலி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, ஜூலியிடம் போராட்டம் நடத்தியது தொடர்பாக போலீசார் எழுதி வாங்கியதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து, மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஜூலி உள்ளிட்ட 4 பேர் மீது அனுமதி இன்றி பிரச்சாரம் செய்தல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மெரினா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: “மாநில உரிமைகளுக்கு ஆபத்து; தமிழகத்திற்குத் தண்டனையா?”.. தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு விஜய் கடும் கண்டனம்!!