AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“மாநில உரிமைகளுக்கு ஆபத்து; தமிழகத்திற்குத் தண்டனையா?”.. தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு விஜய் கடும் கண்டனம்!!

Constituency Delimitation Bill: மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றப்படும்போது, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார். "ஒன்றிய அரசின் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், இனி நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும் சூழல் உருவாகும் என்று கூறியுள்ளார்.

“மாநில உரிமைகளுக்கு ஆபத்து; தமிழகத்திற்குத் தண்டனையா?”.. தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு விஜய் கடும் கண்டனம்!!
தவெக தலைவர் விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 15 Apr 2026 12:28 PM IST

ஒன்றிய அரசு கொண்டு வரவுள்ள ‘அரசியலமைப்பு (131-ஆவது திருத்தம்) மசோதா, 2026’ தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது என்றும், தமிழக மக்களின் குரலை ஒடுக்கும் முயற்சி என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.

மேலும் படிக்க: தொகுதி மறுவரையறை.. “850 எம்பிக்கள்.. 33% மகளிர் இடஒதுக்கீடு”.. இந்திய அரசியலமைப்பில் வரப்போகும் பெரும் மாற்றங்கள்!

33% இட ஒதுக்கீட்டை வரவேற்கும் விஜய்:

நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த மசோதாவின் மூலம், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து 850 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள விஜய், தொகுதி மறுவரையறை செய்யப்படுவதால் ஏற்படும் பின்விளைவுகளைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாநிலங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்:

“இந்த மசோதா நிறைவேறினால், வட மாநிலங்களுக்கும் தென் மாநிலங்களுக்கும் இடையிலான பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் பெரும் மாற்றத்தைச் சந்திக்கும். குறிப்பாக, வட மாநிலங்களின் ஆதிக்கம் நாடாளுமன்றத்தில் அதிகரிக்கும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஒன்றிய அரசு தரும் தண்டனை:

ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு அறிவிப்புகளைக் கடந்த பல தசாப்தங்களாகத் தமிழகம் போன்ற தென் மாநிலங்கள் முறையாகப் பின்பற்றி வருகின்றன. ஆனால், இதைக் கடைப்பிடித்த மாநிலங்களுக்குத் தொகுதி எண்ணிக்கையைக் குறைத்து “தண்டனை” வழங்குவதும், பின்பற்றாத மாநிலங்களுக்குத் தொகுதிகளை உயர்த்தி “வெகுமதி” அளிப்பதும் அறமற்ற செயல் என விஜய் தனது அறிக்கையில் பதிவிட்டுள்ளார்.

குறையும் தமிழகத்தின் குரல்:

மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றப்படும்போது, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார். “ஒன்றிய அரசின் கொள்கைகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், இனி நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும் சூழல் உருவாகும். இது திட்டமிட்ட பாரபட்சமான நடவடிக்கை” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நிதிப் பகிர்வில் ஏற்படப்போகும் இழப்பு:

தொகுதி மறுவரையறை என்பது வெறும் எண்ணிக்கையோடு நின்றுவிடாமல், மாநிலங்களுக்கான நிதிப் பகிர்விலும் எதிரொலிக்கும் என விஜய் சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கெனவே தமிழகம் போன்ற மாநிலங்கள் நிதிப் பகிர்வில் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன. தொகுதி எண்ணிக்கை மாறினால், மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறைய வாய்ப்புள்ளது. பட்ஜெட் தாக்கலின் போதே தமிழகம் புறக்கணிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழும் நிலையில், இந்த மாற்றம் மாநில உரிமைகளை மேலும் பறிக்கும்.

மேலும் படிக்க: பிரதமரை மிரட்டும் தொனியில் பேசுவதா? முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கண்டனம்..

பழைய நடைமுறையே தொடர வேண்டும்:

பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய ‘அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026’ நிறைவேற்றும் முயற்சியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். தற்போது அமலில் உள்ள பழைய நடைமுறையையே தொடர வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு எனத் தளபதி விஜய் தனது அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார்.

Follow Us