ராகுல் காந்தியின் தமிழக வருகை.. ஸ்டாலினுக்காக அல்ல.. பாஜகவுக்காக.. அண்ணாமலை அதிரடி.
Annamalai criticized MK Stalin : தமிழகத்தில் மு. க. ஸ்டாலினுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் பிரசாரம் செய்ய வரவில்லை, அவர்கள் வந்தது தமிழகத்தில் பாஜக வந்துவிடக்கூடாது என்பதற்காகவே என்று பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார் .
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களுக்கு ஆதரவாக தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, சென்னை மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆதரவு திரட்டி அண்ணாமலை வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பேசியதாவது: தூய்மையான நகரங்களில் சென்னை 38- ஆவது இடத்தில் உள்ளது. மதுரை 40- ஆவது இடத்தில் உள்ளது. சென்னையில் அடிப்படை கட்டமைப்பான வடிகால், பாதாள சாக்கடை திட்டம், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை சுழற்சி அடிப்படையில் சேகரித்து சுத்தம் செய்ய வேண்டும். அடையார் ஆற்றை சுத்தம் செய்வதாக கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது வரை அந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை.
சிங்கார சென்னை திட்டத்தில் ரூ.5 ஆயிரம் கோடி செலவு
இதே போல, மீனவர்களுக்கு சுமார் 2 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தனர். ஆனால், அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் ரூ.5000 கோடி செலவு செய்துள்ள நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக சரியான மழை பெய்யாத காரணத்தால் திமுக அரசு தப்பித்துள்ளது. தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தை குறைப்பதற்காக ஆபரேஷன் 1, ஆப்ரேஷன் 2 நடத்தியும் வெறும் 65 ஆயிரம் கிலோ மட்டுமே கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வாக்காளர் அடையாளத்தில் சந்தேகம் உள்ளதா? ரூ.2 சேலஞ்ச் கட்டணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?




மே 4- ஆம் தேதி எடப்பாடி முதல்வராவது உறுதி
தமிழகம் முழுவதும் சர்வ சாதாரணமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்வதற்காக மே 4- ஆம் தேதிக்குப் பிறகு தமிழக முதல்வராக எடப்பாடி கே. பழனிசாமி பதவி ஏற்பதற்கு மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்து சட்டமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம் மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகள் வளர்ச்சி பெறும் என்று தெரிவித்தார்.
ஸ்டாலினுக்கு ஆதரவாக யாரும் பிரசாரம் செய்யவில்லை
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். தமிழகத்தில் பாஜக வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தை தவிர மு. க. ஸ்டாலினுக்கு ஆதரவாக ராகுல் காந்தி உள்ளிட்ட யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தியை, மு க ஸ்டாலின் சந்திக்கவில்லை. இதன் மூலம், தேங்காய் சிதறியது போல திமுக கூட்டணி சிதறியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: கருத்துக்கணிப்புகள், மக்கள்கணிப்புகள் என எதிலும் நாம்தான்.. படைப்போம் வரலாறு – முதல்வர் ஸ்டாலின்..