இனி பெட்ரோல் பங்கில் UPI இல்லையா?.. எம்டிஆர் ஏற்படுத்தும் நெருக்கடி.. முழு விவரம் இதோ!
Will Petrol Bunks Stop Accepting UPI Above 2,000 Rupees | இந்தியாவில் அக்டோபர் 15, 2026 முதல் எம்டிஆர் கட்டணம் அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், சில்லறை வியாரிகளுக்கு எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படும் பட்சத்தில் ரூ.2,000-க்கு மேல் யுபிஐ-ல் பண பெறாத சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவில் எம்டிஆர் (MDR – Merchant Discount Rate) கட்டணத்தை அறிமுகம் செய்வதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த கட்டண முறையால், பொதுமக்களுக்கு எந்தவித சிக்கல்களும் இல்லை என்றாலும், வணிகர்கள் தரப்பில் இருந்து தொடர் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தான், பெட்ரோல் பங்குகளில் யுபிஐ (UPI – Unified Payment Interface) பரிவர்த்தனையை நீக்கம் செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரூ.2,000-க்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணம்
வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.2,000-க்கு மேல் யுபிஐ மூலம் பணம் பெறும் நிறுவனங்கள் 0.4 சதவீதம் கட்டணம் செலுத்தும் எம்டிஆர் கட்டண முறையை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கட்டணம் அக்டோபர் 15, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. இது பொதுமக்களை பெரிதாக பாதிக்காது என்றாலும், நிறுவனங்களுக்கு சிக்கல் தான். இந்த நிலையில் தான், இந்த எம்டிஆர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என வணிகர்கள் தரப்பில் கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
இதையும் படிங்க : “செலவு ரூ.1.38 லட்சம் கோடி.. வருவாய் பற்றாக்குறை ரூ.20,340 கோடி!”.. வெளியான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை!!
பெட்ரோல் பங்குகளுக்கும் பொருந்தும் எம்டிஆர் கட்டணம்
இந்த எம்டிஆர் கட்டணம் குறித்து என்சிபிஐ சில விதிகளை வெளியிட்டது. அதில், பெட்ரோல் பங்குகளில் ரூ.2,000-க்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொண்டால் அதற்கு ரூ.5 முதல் கட்டணம் விதிக்கப்படும் என கூறியிருந்தது. ரூ.2,000-க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு எந்தவித கட்டணமும் விதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இது பெட்ரோல் பங்க் வைத்துள்ளவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : கர்நாடகாவில் வெளிச்சத்துக்கு வந்த பெட்ரோல் நிலைய மோசடிகள் – 768 நிலையங்களில் முறைக்கேடு கண்டறியப்பட்டதால் அதிர்ச்சி
ரூ.2,000-க்கு மேலான பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம்
தற்போது பெட்ரோல், டீசல் விற்பனையில் டீலர்களுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.2.40 முதல் 3.40 வரை மட்டுமே லாபம் கிடைக்கிறது. இந்த நிலையில், எம்டிஆர் கட்டணம் விதிக்கப்பட்டால் கடும் சிரமம் ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், அகில இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் தலைவர் மான்டி சேகல், எரிபொருள் சில்லறை விற்பனையாளர்களுக்கு எம்டிஆர் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கவில்லை என்றால் பெட்ரோல் பங்குகளில் ரூ.2,000-க்கு மேலான யுபிஐ பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.



