இனி வாட்ஸ்அப் மூலம் பிஎஃப் சேவைகளை பெறலாம் – வெளியான தகவல்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது கோடிக்கணக்கான பயனாளர்களுக்காக வாட்ஸ்அப் மூலம் செயல்படும் வகையில் புதிய டிஜிட்டல் சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. வாட்ஸ்அப்பில் பிஎஃப் பேலன்ஸ், கடைசி 5 பரிவர்த்தனைகள், கிளைம் ஸ்டேட்டஸ், புகார்களின் நிலை போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, தனது கோடிக்கணக்கான பயனாளர்களுக்காக புதிய டிஜிட்டல் சேவையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.இந்த புதிய வசதியின் மூலம், இனி பிஎஃப் கணக்கு விவரங்களை தெரிந்துகொள்ள இணையதளம் மூலம் லாகின் செய்யவோ அல்லது இபிஎஃப்ஓ அலுவலகங்களுக்கு நேரில் செல்லவோ தேவையில்லை. வாட்ஸ்அப்பில் Hello என்று மெசேஜ் அனுப்பினாலே பிஎஃப் தொடர்பான அனைத்து முக்கிய தகவல்களையும் பெற முடியும். இது முன்பை விட பிஎஃப் கணக்கை அணுகுவது மிக எளிதாக மாறும்.
வாட்ஸ்அப்பில் பிஎஃப் சேவை
இபிஎஃப்ஓ விரைவில் நாடு முழுவதும் ஒரே பொதுவான வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிலையில் அந்த எண்ணுக்கு hello என்று அனுப்பியவுடன் பயனர்களுக்கு பல்வேறு சேவைகள் காட்டப்படும். உதாரணமாக பிஎஃப் பேலன்ஸ், கடைசி 5 பரிவர்த்தனைகள், கிளைம் ஸ்டேட்டஸ், புகார்களின் நிலை போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
இதையும் படிக்க : என்பிஎஸ் திட்டத்தில் ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்ட ஓய்வூதியம்?.. இபிஎஃப்ஓ விளக்கம்!




தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் சேவை
இந்த புதிய சேவையின் முக்கிய அம்சமாக, பயனர்கள் தங்களது சொந்த மொழியிலேயே தகவல்களை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இந்த சேவை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஏஐ சாட்பாட் மூலம் செயல்படும். இந்த ஏஐ சாட்பாட் 24 மணி நேரமும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படும். இந்த சாட்பாட் மூலம் நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் கிடைக்கும். பொதுவான சந்தேகங்கள் மட்டுமில்லாமல் சில சிக்கலான கேள்விகளுக்கும் நமக்கு பதில் கிடைக்கும். பதில் மட்டுமில்லாமல் நம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதும் நமக்கு சொல்லப்படும்.
இதையும் படிக்க : மொத்த Vs தனித்தனி FD முதலீடு.. இரண்டில் எதில் முதலீடு செய்வது அதிக லாபத்தை தரும்?
இந்த புதிய வசதி அறிமுகமானால் இபிஎஃப்ஓ அலுவலகங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டிய அவசியம் குரையும். புகார்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இபிஎஃப்ஓவில் நிலுவையில் உள்ள பல கோரிக்கைகளை குறைக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.