மானியம் வழங்குவதில் சிக்கல்? எல்பிஜி சிலிண்டர் விலை உயருமா?
நடப்பு நிதியாண்டில் மொத்த எல்பிஜி மானியத்துக்கு ஆகும் செலவு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதனை சமாளிக்க மத்திய அரசுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் தேவைப்படலாம். அதனை சமாளிக்க எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாட்டில் எல்பிஜி சிலிண்டர் மானியம் 2026-27 நிதியாண்டில் அரசுக்கு ஒரு பெரும் சவாலாக அமையக்கூடும். இது தொடர்பாக வெளியான தகவலின் படி, நடப்பு நிதியாண்டில் மொத்த எல்பிஜி மானியத்துக்கு ஆகும் செலவு ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, அதே சமயம் மத்திய பட்ஜெட்டில் இதற்காக ரூ.30,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பட்ஜெட் மதிப்பீடுகளைத் தாண்டி அரசு சுமார் ரூ.70,000 கோடி கூடுதலாக தேவைப்படும் என கூறப்படுகிறது.
சர்வதேச அளவில் எல்பிஜி விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சிலிண்டர் விலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசின் கொள்கை ஆகியவற்றால் மானியச் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்த அறிக்கை கூறுகிறது. பணவீக்கத்தின் தாக்கத்திலிருந்து சாமானிய மக்களை குறிப்பாக உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கு மாணியம் பெறும் பயனாளர்களை பாதுகாப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் விளைவாக, பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) சந்திக்கும் இழப்புகளை ஈடுசெய்யும் நிலைக்கு அரசு தள்ளப்படலாம்.
இதையும படிக்க : AAY ரேஷன் கார்டு பயனர்களுக்கு இனி 35 கிலோ அரிசி கிடையாது?.. புதிய வரைவு மசோதா கூறுவது என்ன?




எண்ணெய் நிறுவனங்கள் மீது அதிகரிக்கும் அழுத்தம்
மானியத் தேவை பட்ஜெட் தொகையைத் தாண்டினால், அதன் ஆரம்பக்கட்ட தாக்கம் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் மீது விழக்கூடும். இருப்பினும், கூடுதல் பட்ஜெட் ஆதரவு அல்லது பிற நிதி ஏற்பாடுகள் மூலம் அரசு பின்னர் இந்த நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கலாம். சர்வதேச எல்பிஜி விலைகள் தொடர்ந்து அதிகமாக இருந்தால், அரசின் மீதான நிதி நெருக்கடி மேலும் தீவிரமடையக்கூடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
சிலிண்டர் விலை அதிகரிக்கப்படுமா?
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் வரம்பு விரிவுபடுத்தப்பட்டிருப்பதும், அதிக எண்ணிக்கையிலான பயனாளிகள் இருப்பதும் அரசின் மானியச் செலவு அதிகரிப்புக்குக் காரணமாக அமைகின்றன. நுகர்வோர் மீது கூடுதல் சுமையைச் சுமத்துவதற்குப் பதிலாக, மானியங்கள் மூலம் நிவாரணம் அளிப்பதற்கான உத்தியை அரசு தற்போது வகுத்து வருகிறது.
இதையும் படிக்க : யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படுமா? உண்மை என்ன?
எல்பிஜி மானியச் செலவு, கணிக்கப்பட்ட ரூ.1 லட்சம் கோடி என்ற அளவைத் தாண்டினால், அரசு கூடுதல் நிதியைத் திரட்ட வேண்டியிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைவதையும் சவாலானதாக மாற்றக்கூடும். வரும் மாதங்களில் சர்வதேச எரிபொருள் விலைகள், உள்நாட்டுத் தேவை மற்றும் அரசின் மானியக் கொள்கை ஆகியவற்றின் மீது அனைவரின் கவனமும் இருக்கும். உலகச் சந்தையில் எல்பிஜி விலைகள் குறைந்தால் அரசின் மீதான சுமை குறையக்கூடும்; ஆனால் விலைகள் தொடர்ந்து அதிகமாக இருந்தால், கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் தேவைப்படலாம். அதனை சமாளிக்க எல்பிஜி சிலிண்டர் விலை உயர்த்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.