கைது நடவடிக்கைக்கு அஞ்சமாட்டோம்.. சட்ட ரீதியாக சந்திப்போம்.. பொங்கிய ஆர்.எஸ்.பாரதி!
DMK MLA Arrest RS Bharathi Condemned: தமிழக வெற்றிக் கழக அரசின் கைது நடவடிக்கையை நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று அந்தக் கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறிய கருத்தை விரிவாக பார்க்கலாம்.
முதல்வர் விஜயை மிரட்டும் வகையில் சர்ச்சைக்குரியதாக பேசியதாக திமுக எம்எல்ஏவை போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜனநாயகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மை அனைவருக்கும் வேண்டும். தற்போதைய தவெக அரசு ஆட்சிக்கு வந்த 60 நாட்களிலேயே சகிப்புத்தன்மை இல்லை என்பதை நிரூபித்துள்ளது. மாற்று கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுக்கும் தவெக அரசு திமுகவில் உள்ள எம்எல்ஏக்கள் உறுதியாக இருப்பதால் அவர்களை மாற்ற முடியாது என்ற காரணத்தால் இது போன்ற கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, திருச்செந்தூர் தொகுதி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல். ஏ. கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது, 2- ஆவது முறையாக விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கையை சட்ட ரீதியாக சந்திப்போம்
இதனை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். திமுகவினரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தின் மீது தங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த விவகாரங்களை சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கு திமுக தயாராகவே உள்ளது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கை பேணி காக்க வேண்டிய காவல்துறை அதற்கு நேரம் இல்லாமல், திமுகவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவேடும் இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை நள்ளிரவில் அச்சுறுத்தி வருகிறது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு.. திமுக எம்எல்ஏ அதிரடி கைது!!
திமுக எம்எல்ஏவை கைது செய்ய அவசியமில்லை
முதல் அமைச்சர் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் எம்எல்ஏ மார்க்கண்டேயன் அவ்வாறு பேசி இருந்தால் வழக்கு பதிவு செய்திருக்கலாம். கைது செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. சில நேரங்களில், உணர்ச்சிவசப்பட்டு இது போன்ற வார்த்தைகள் வெளிப்படுத்தப்படுகிறது. உண்மையாகவே தாக்க வேண்டும், கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் இருந்திருந்தால் அது வேறு விஷயமாகும். ஆனால், பேச்சின் வேகத்தில் சில வார்த்தைகள் வந்துவிடும்.
தவெக அரசின் நடவடிக்கையை நீதிமன்றம் முடிவு செய்யும்
சாதாரணமாக சவுக்கடி கொடுத்தார் என்று நாமும் பேசுவோம். அதை ஊடகங்கள் தலைப்பாக போடுகின்றன. இது போலவே, எம்எல்ஏ மார்க்கண்டேயனின் பேச்சையும் பார்க்க வேண்டும். இதை உள்நோக்கத்துடன் திட்டமிட்டு கூறியதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதல் அமைச்சர் சட்டப்பேரவை கதவை மூடுவேன் என்று சொன்னபோது, அதற்கு பதிலாக வார்த்தைகளால் அடித்து விட்டு வெளியே வருவோம் என்று அவர் கூறி இருக்கலாம். இவற்றையெல்லாம் நீதிமன்றம் பார்த்து முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “நடப்பது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?”.. திமுக எம்.எல்.ஏ கைதுக்கு மு.க.ஸ்டாலின், கனிமொழி கடும் கண்டனம்!!


