நாளை திருமணம்.. செல்போனுக்கு வந்த ஒரு மெசேஜ்.. திருப்பத்தூரில் மணப்பெண் எடுத்த முடிவு.. திருமண வீடே கதறி அழுகிறது!
Tirupattur Young Woman Self Harm : திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், செல்போனில் இளைஞர் மிரட்டியதால் இளம் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர் .
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள கொத்தகோட்டை கோடியூர் பகுதியை சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி அலமேலு. தம்பதிக்கு 20 வயதில் ஸ்ரீ தர்ஷினி என்ற மகள் இருந்தார். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் உள்ள அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரியில் 2- ஆம் ஆண்டு கணினி அறிவியல் படித்து வந்தார். இந்த நிலையில், ஸ்ரீதர்ஷினிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைப்பதற்காக மாப்பிள்ளை பார்த்து வந்தனர். அதன்படி, மாப்பிள்ளை பார்க்கப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், திருப்பத்தூர் அருகே உள்ள பேராம்பட்டு மங்குண்டு பெருமாள் கோவிலில் நாளை ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மிரட்டிய இளைஞர்
இந்த நிலையில், மாணவி ஸ்ரீதர்ஷினி இளைஞர் ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாணவிக்கு திருமணம் நடைபெற இருந்ததை அறிந்த அந்த இளைஞர் செல்போன் மூலம் ஸ்ரீதர்ஷினியை தொடர்பு கொண்டு என்னை விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்கிறாயா என்று மிரட்டியதாக தெரிகிறது. அத்துடன், வாட்ஸ் ஆப்பில் ஆடியோ அனுப்பியதாக தெரிகிறது. இதில், மனம் உடைந்த மாணவி ஸ்ரீதர்ஷினி சம்பவத்தன்று இரவு அனைவரும் சென்று தூங்கச் சென்ற நிலையில் விஷத்தை அருந்தி மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் படிக்க: திண்டுக்கல்லில் சோகம்.. பைக் மீது மோதிய கார்.. நாளை திருமணம் நடக்க இருந்த பெண் பலி.. அவசர சிகிச்சையில் ராணுவ வீரர்!




விஷம் அருந்து தற்கொலை செய்த இளம் பெண்
அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. என் தொடர்பாக தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மாணவியின் தந்தை விநாயகம் வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, அந்த மாணவியின் செல்போனை கைப்பற்றிய போலீசார் அதில் தொடர்பு கொண்டு பேசிய இளைஞரின் செல்போன் நம்பரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
இளம் பெண்ணுக்கு அனுப்பிய ஆடியோ வைரல்
இதில், மாணவிக்கு, அந்த இளைஞர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக, மாணவிக்கு அந்த இளைஞர் அனுப்பிய வாட்ஸ் ஆப் ஆடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருப்பத்தூரில் நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில், இளம்பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மற்றும் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கணவரை பிரிந்து தனியாக வசித்த பெண்.. கழுத்தறுத்த நிலையில் சடலமாக மீட்பு.. திண்டுக்கல்லில் பகீர் சம்பவம்!