திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வாசலில் கட்டிட தொழிலாளி கொடூர கொலை…
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள புகழ்பெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோவில் வாசலில், ஜூன் 11, 2026 இரவு நிகழ்ந்த தகராறில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் செங்கற்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 11 : சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள புகழ்பெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோவில் வாசலில், ஜூன் 11, 2026 இரவு நிகழ்ந்த தகராறில் கட்டிடத் தொழிலாளி ஒருவர் செங்கற்களால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், புலியூர் பகுதியைச் சேர்ந்த தேவன் (வயது 45) பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்துள்ளார். பகல் நேரங்களில் கட்டிட வேலைகளைச் செய்து வருகிறார். இரவில் தங்குவதற்கு முறையான வசதி இல்லாததால், இவர் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு, திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் வாசலில் படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வாசலில் கட்டிட தொழிலாளி கொடூர கொலை
இதேபோல், பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்த ரபீக் (25) என்ற பெயிண்டரும் அதே பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். அவரும் வேலை முடிந்து இரவு நேரங்களில் கோவில் வாசலிலேயே தூங்கி வந்துள்ளார். இவர்களிருவருக்கும் நீண்ட நாட்களாகவே பழக்கம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம்போல இருவரும் கோவில் வாசலில் படுக்கச் சென்றபோது, இவர்களுக்கு இடையே ஏதோ ஒரு விஷயத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றி, தகராறாக மாறியுள்ளது.
இதையும் படிக்க : குண்டும் குழியுமான சாலை… பிஞ்சு உயிரை காவு கொண்ட பரிதாபம்!




இதில் ஆத்திரமடைந்த ரபீக், அருகில் கிடந்த செங்கற்களை எடுத்துத் தேவனை சரமாரியாகத் தாக்கியுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த தேவன், உதவிக்கு யாரும் வருவதற்கு முன்பாகவே, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தேவன் உயிரிழந்ததை உறுதி செய்த ரபீக், அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இதைக் கவனித்த அருகில் இருந்த கோவில் வாசல் போலீஸ் பூத்தில் பணியில் இருந்த காவலர்கள், சற்றும் தாமதிக்காமல் அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
தற்போது ரபீக்கை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் இந்த கொலை நடந்ததா அல்லது முன்விரோதம் ஏதும் காரணமா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை மாநகரின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான பார்த்தசாரதி கோவில் வாசலில், நள்ளிரவில் இத்தகைய கொலைச் சம்பவம் நிகழ்ந்திருப்பது அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : சிங்கப்பெண்கள் படையின் முதல் வேட்டை.. சென்னையில் புகார் அளித்த 1 மணி நேரத்தில் தரமான சம்பவம்!
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தடயவியல் நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர் ஆதாரங்களைச் சேகரித்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், ரபீக் மீது கொலை வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.