பெண்களிடம் அட்டகாசம் செய்த இளைஞர்கள் : 3 மணி நேரத்தில் தட்டி தூக்கிய ‘சிங்கப்பெண்’ படை!
பெரம்பூர் பகுதியில் பள்ளி மாணவிகளை கேலி செய்த இளைஞர்கள் வெறும் 3 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக வலைதளஙகள் தகவல் கிடைத்த 3 மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, ஜூன் 11: சென்னை மாநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதிலும், பொதுவெளியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சென்னை காவல்துறை பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்கள் மூலம் பெறப்படும் புகார்களுக்கு அதிவேகமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது.
பெண்களிடம் அட்டகாசம் செய்த இளைஞர்களை கைது செய்த சிங்கப்பெண் படை
அதன் சமீபத்திய சான்றாக, பெரம்பூர் பகுதியில் பள்ளி மாணவிகளை கேலி செய்த இளைஞர்கள் வெறும் 3 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சென்னை, பெரம்பூர் பகுதியில் உள்ள சாலை ஒன்றில், பள்ளி மாணவிகள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு மூன்று வெவ்வேறு இருசக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் சிலர், மாணவிகளைத் தொடர்ந்து பின் தொடர்ந்து கேலி செய்துள்ளனர்.
இதையும் படிக்க : கொடூர சாலை விபத்து.. 5 பள்ளி மாணவர்கள் பலி.. திருவாரூர்- கள்ளக்குறிச்சியில் சோகம்!




இந்த அத்துமீறலைக் கவனித்த சமூக ஆர்வலர் ஒருவர், உடனடியாக இந்தச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து, அதைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், அந்தப் பதிவில் சென்னை மாநகர காவல்துறை அதிகாரிகளை டேக் (Tag) செய்து, மாணவிகளுக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
சமூக வலைதளத்தில் வெளியான இந்தத் தகவலைக் கவனித்த சென்னை மாநகர காவல்துறை, உடனடியாகச் செயல்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அமைக்கப்பட்ட ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படையினருக்கு இந்தத் தகவல் உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிங்கப்பெண் படையினர், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
மேலும், அந்தப் பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவலர்களுடன் இணைந்து, அப்பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். துரிதமாகச் செயல்பட்ட காவல் அதிகாரிகள், புகார் பதிவிடப்பட்ட மூன்றே மணி நேரத்திற்குள், மாணவிகளை கேலி செய்த அந்த 3 இளைஞர்களைக் கண்டுபிடித்து அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து, அவர்கள் அத்துமீறலுக்குப் பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களைத் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அதிரடி நடவடிக்கை குறித்து சென்னை காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.
இதையும் படிக்க : ஈமு கோழி பண்ணை நடத்தி மோசடி.. இருவருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்.. அதிரடி தீர்ப்பு!
அந்தப் பதிவில், “சமூக வலைதளத்தில் வந்த தகவலின் அடிப்படையில், பெரம்பூரில் மாணவிகளை கேலி செய்த நபர்களை சிங்கப்பெண் அதிரடிப்படையினர் 3 மணி நேரத்தில் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களது 3 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெண்களுக்குப் பாதுகாப்பற்ற செயல்களில் ஈடுபடும் எவரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது” என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் இந்தத் துரிதச் செயல்பாட்டிற்குச் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவதோடு, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் இளைஞர்களிடையே ஒரு பயத்தையும் ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.