ஈமு கோழி பண்ணை நடத்தி மோசடி.. இருவருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்.. அதிரடி தீர்ப்பு!
பணம் கொடுத்து ஏமாந்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், 'ஆதவன்' ஈமு பண்ணை நிர்வாகத்தினர் மொத்தம் 115 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 37 லட்சத்து 98 ஆயிரம் வரை மோசடி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
கோவை, ஜுன் 11: நாமக்கல் மாவட்டத்தில் ஈமு கோழி பண்ணை நடத்தி முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், நிறுவன உரிமையாளர்கள் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் அபராதம் விதித்து கோவை டான்பிட் (TANPID) நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பெரிய மணலி பகுதியில் ‘ஆதவன்’ என்ற பெயரில் ஈமு கோழி பண்ணை ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர்.
இதையும் படிக்க : “சட்டம் – ஒழுங்கு பரபரப்புக்கு மத்தியில் கலகல சம்பவம்” இரு பெண்களுடன் வாழ விருப்பம்.. திண்டுக்கல் காவல் நிலையத்தில் இளைஞர் பிடிவாதம்!
கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டம்:
அப்போது பொதுமக்களை ஈர்க்கும் வகையில் பல கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களை இவர்கள் அறிமுகப்படுத்தினர். அதன்படி, நிறுவனத்தில் ரூ.1.5 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள் வழங்கப்படும். அதோடு, அடுத்த 24 மாதங்களுக்குத் தொடர்ந்து மாதந்தோறும் ரூ.15,000 ஊக்கத்தொகை மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். இந்த அதீத லாபம் தரும் திட்டங்களை நம்பி, அப்பகுதியைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள் லட்சக்கணக்கில் தங்களது பணத்தை முதலீடு செய்தனர். ஆனால், கோடிக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்ட நிறுவனத்தினர், அறிவித்தபடி முதலீட்டாளர்களுக்கு உரிய தொகையையோ அல்லது தங்கத்தையோ திருப்பித் தராமல் ஏமாற்றி, பணத்தைச் சுருட்டி தலைமறைவாகினர்.
பொருளாதார குற்றப்பிரிவு விசாரணை:
பணம் கொடுத்து ஏமாந்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ‘ஆதவன்’ ஈமு பண்ணை நிர்வாகத்தினர் மொத்தம் 115 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 37 லட்சத்து 98 ஆயிரம் வரை மோசடி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து பண்ணை உரிமையாளர்களான சந்திரசேகரன், சோமசுந்தரம், நிறுவன கணக்கர் அமுதா மற்றும் பங்குதாரர்கள் ராமகிருஷ்ணன், ஆனந்தன் ஆகிய ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை டான்பிட் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு:
இது தொடர்பான வழக்கு விசாரணை கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்புச் சட்ட நீதிமன்றத்தில் (TANPID) கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நேற்று நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்தது நிரூபிக்கப்பட்டதால், முக்கிய குற்றவாளிகளான பண்ணை உரிமையாளர்கள் சந்திரசேகரன் மற்றும் சோமசுந்தரம் ஆகிய இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிக்க : சென்னையில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை.. கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்? ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு!
மேலும், இருவருக்கும் சேர்த்து ரூ.1 கோடியே 3 லட்சத்து 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற மூன்று பேரான அமுதா, ராமகிருஷ்ணன் மற்றும் ஆனந்தன் ஆகியோர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். ஈமு கோழி பண்ணை மோசடி வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளுக்குப் பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.