ஆன்லைன் மூலம் நூதனம்.. முதியவர் மற்றும் இளைஞரிடம் ரூ.1.25 கோடி சுருட்டிய கேரள கும்பல் கைது.. தூத்துக்குடியில் பரபரப்பு!
மற்றொரு சம்பவத்தில், தூத்துக்குடி புறநகர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான இளைஞர் ஒருவரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் வர்த்தகம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டியுள்ளார். அதை நம்பி அந்த இளைஞர் முதலில் ₹300 அனுப்பியுள்ளார். அதற்கு மறுநாளே ரூ.200 லாபம் சேர்த்து ரூ.500 ஆக அந்த நபர் திருப்பி அனுப்பியுள்ளார்.
தூத்துக்குடி, ஜுன் 11: தூத்துக்குடியில் அடுத்தடுத்து நடந்த இரு வேறு சைபர் கிரைம் மோசடி சம்பவங்களில், ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரிடமும், தனியார் நிறுவன வாலிபர் ஒருவரிடமும் சேர்ந்து மொத்தம் ₹1.25 கோடி ரூபாய் வரை ஏமாற்றிய கேரளாவைச் சேர்ந்த மூன்று பேரை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 63 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரை, கடந்த மாதம் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் இரண்டு நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் சீருடையில் இருந்துள்ளனர். தங்களைத் ‘தீவிரவாத எதிர்ப்பு படை’ அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த மர்ம நபர்கள், முதியவரின் வங்கி கணக்கிலிருந்து தீவிரவாதிகளின் வங்கி கணக்கிற்குப் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கியிடம் இருந்து தங்களுக்குப் புகார் வந்துள்ளதாகக் கூறி மிரட்டியுள்ளனர்.
இதையும் படிக்க : “சட்டம் – ஒழுங்கு பரபரப்புக்கு மத்தியில் கலகல சம்பவம்” இரு பெண்களுடன் வாழ விருப்பம்.. திண்டுக்கல் காவல் நிலையத்தில் இளைஞர் பிடிவாதம்!
தீவிரவாதிகளுடன் தொடர்பு என மிரட்டல்:
அதிர்ச்சியடைந்த முதியவர், தனக்கு தீவிரவாதிகளுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று மறுத்துள்ளார். உடனே அந்த மோசடி நபர்கள், “நீங்கள் சொல்வது உண்மை என்றால், உங்கள் வங்கி கணக்கில் இருக்கும் மொத்தப் பணத்தையும் நாங்கள் கூறும் ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு கணக்கிற்கு அனுப்ப வேண்டும்; நாங்கள் அதை ஆய்வு செய்துவிட்டு, தீவிரவாதிகளுடன் உங்களுக்குத் தொடர்பு இல்லை என்பது உறுதியானதும் பணத்தைத் திருப்பி அனுப்பி விடுவோம். வழக்கில் இருந்தும் விடுவித்து விடுவோம்” என்று டிஜிட்டல் முறையில் அவரை சிறைபிடித்து மிரட்டியுள்ளனர்.
இதை உண்மை என்று நம்பிய முதியவர், தன் கணக்கில் இருந்த ₹48,75,000-யை அவர்கள் குறிப்பிட்ட கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஒரு மாதமாகியும் பணமும் திரும்ப வரவில்லை, எந்தத் தகவலும் இல்லாததால் அந்த வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ள முயன்றபோது அது உபயோகத்தில் இல்லை என வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதியவர் தூத்துக்குடி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இளைஞரிடம் ₹75.25 லட்சம் சுருட்டல்:
மற்றொரு சம்பவத்தில், தூத்துக்குடி புறநகர் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான இளைஞர் ஒருவரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் வர்த்தகம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டியுள்ளார். அதை நம்பி அந்த இளைஞர் முதலில் ₹300 அனுப்பியுள்ளார். அதற்கு மறுநாளே ரூ.200 லாபம் சேர்த்து ரூ.500 ஆக அந்த நபர் திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் நம்பிக்கையடைந்த இளைஞர், அதிக லாபம் ஈட்டும் நோக்கில் 6 தவணைகளாக மொத்தம் ₹75,25,000-ஐ அந்த நபரின் கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், அதன் பிறகு அசலும் வரவில்லை, லாபமும் வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இளைஞரும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி வேட்டை:
அடுத்தடுத்து வந்த புகார்களைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில், சைபர் கிரைம் ஏடிஎஸ்பி சகாய ஜோஸ், ஆய்வாளர் சாந்தி, உதவி ஆய்வாளர் திவாகர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை தொழில்நுட்ப ரீதியாகத் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அடுத்தடுத்து கைது நடவடிக்கை:
முதியவரை ஏமாற்றியது கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த 36 வயது ரிஜோய் மற்றும் 27 வயது சம்நாத் என்பது தெரியவந்தது. கேரளா விரைந்த தனிப்படை போலீசார் இவர்கள் இருவரையும் கைது செய்தனர். அதேசமயம், ஆன்லைன் வர்த்தக வழக்கில் இளைஞரை ஏமாற்றியது கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த முகமது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சூரில் பதுங்கியிருந்த முகமதுவையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து தூத்துக்குடி அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க : சென்னையில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை.. கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீதம்? ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு!
ஒன்றே கால் கோடி ரூபாய் மோசடி செய்த கேரளாவைச் சேர்ந்த 3 சைபர் குற்றவாளிகள் தூத்துக்குடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ கால்கள் மற்றும் ஆன்லைன் பகுதி நேர வேலை மற்றும் வர்த்தக விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் பணத்தை இழக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.