விழுப்புரத்தில் வெடித்த அதிமுக உட்கட்சிப் பூசல்.. இபிஎஸ் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த சி.வி.சண்முகம்!
EPS AIADMK meeting Villupuram: விழுப்புரம் அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 1,150 ஆதரவாளர்கள் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தைச் சி.வி. சண்முகம் புறக்கணித்துள்ளார். சி.வி. சண்முகத்தின் இந்த அதிரடிப் புறக்கணிப்பு விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஜூலை 24: நடந்து முடிந்த தேர்தல் தோல்விகள் மற்றும் கட்சியின் எதிர்கால வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாவட்ட வாரியாகத் தொடர் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில், இன்று நடைபெற்ற விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தைப் முன்னாள் அமைச்சரும், தற்போதைய மயிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.வி. சண்முகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முற்றிலுமாகப் புறக்கணித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? தூத்துக்குடியில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு.. நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்!
மாவட்டச் செயலாளர் பதவி மாற்றம்:
விழுப்புரம் மாவட்டத்தில் நீண்டகாலமாக அதிமுகவின் வலிமைமிக்க தலைவராக உருவெடுத்தவர் சி.வி. சண்முகம். இருப்பினும், கடந்த சில மாதங்களாக அவருக்கும் கட்சிப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் தீவிரக் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதன் உச்சகட்டமாக, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து சி.வி. சண்முகம் விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பசுபதி என்பவர் புதிய மாவட்டச் செயலாளராகக் கட்சியால் நியமிக்கப்பட்டார்.
1,150 ஆதரவாளர்கள் திடீர் ராஜினாமா:
மாவட்டச் செயலாளர் மாற்றத்திற்குச் சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்த வாரத் தொடக்கத்தில், சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்களான ஒன்றிய, நகர மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 1,150 பேர் ஒட்டுமொத்தமாகக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். தங்களின் ராஜினாமா கடிதங்களைச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டு வந்து கொடுத்துத் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் ஆலோசனை:
இந்த அதிரடி திருப்பங்களுக்கு மத்தியில், இன்று ராயப்பேட்டை அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, புதிய மாவட்டச் செயலாளர் பசுபதி தலைமையிலான நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்தில் அதிமுக பின்னடைவைச் சந்தித்தற்கான முக்கியக் காரணங்கள் ஆராயப்பட்டன.
சி.வி. சண்முகம் போட்டியிட்டு வெற்றி பெற்ற ‘மயிலம்’ சட்டப்பேரவைத் தொகுதியைத் தவிர, மாவட்டத்தின் பிற தொகுதிகளில் கட்சி சரிவைச் சந்தித்தது குறித்து காரசாரமாக விவாதிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி உடனான அதிருப்தி காரணமாகச் சி.வி. சண்முகமும், அவரது தீவிர ஆதரவாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
புதிய நிர்வாகிகளுக்கு இபிஎஸ் போட்ட உத்தரவு!
புதியதாகப் பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகளுடன் ஆலோசித்த எடப்பாடி பழனிசாமி, “உட்கட்சிப் பூசல்கள் மற்றும் கருத்து வேறுபாடுகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு, அடிமட்டத் தொண்டர்களை ஒருங்கிணைக்க வேண்டும். எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெறும் வகையில் களப்பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்” என விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
மேலும் படிக்க: ரூ.35 கோடி குதிரை பேர வழக்கு.. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!!
சி.வி. சண்முகத்தின் இந்த அதிரடிப் புறக்கணிப்பு விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பையும், அடுத்தகட்டமாக அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.