மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை.. தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்? டெல்லி போடும் மெகா பிளான்!
Union Home Minister Amit Shah : மத்திய உள்துறை அமித் ஷா ஜூலை 2- ஆவது வாரத்தில் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது வருகையின்போது, தமிழக பாஜகவில் அதிரடி மாற்றங்களி நிகழ போவதாக கூறப்படுகிறது .
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்து பாரதீய ஜனதா கட்சி தேர்தலை சந்தித்து இருந்தது. இந்த தேர்தலில், அதிமுக தலைமையிடம் இருந்து கேட்டு பெற்ற 27 தொகுதியில் போட்டியிட்ட பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், 26 தொகுதிகளில் தோல்வியை தழுவி இருந்தது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக தற்போது மூன்று தொகுதிகளை இழந்திருந்தது. இதனால், பாஜகவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகவும், பாஜக மாநில தலைவர் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது இதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூலை 2- ஆவது வாரத்தில் தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே, முன்னாள் பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கும், தற்போதைய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அத்துடன், தேர்தல் பொறுப்புகளில் நியமிக்கப்பட்ட அண்ணாமலை அந்த பொறுப்பில் இருந்து விலகி இருந்தார்.
தமிழக பாஜக தலைவர் மாற்றம் குறித்த முடிவு
இந்த நிலையில், அண்மையில் பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை டெல்லியில் தமிழக பாஜக தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதி நபின், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை நேரில் சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டை முன் வைத்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தவும், பாஜக தலைவரை மாற்றவும் கட்சி மேலிடம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி கூட்டம்… மக்கள் குறைகளை கேட்டறிந்த சார்-ஆட்சியர்!




கேரள ஆளுநராக நயினார் நாகேந்திரன் நியமிக்க வாய்ப்பு
அதன்படி, தற்போதைய தமிழக பாரதீய ஜனதாக கட்சியின் தலைவராக இருந்து வரும் நயினார் நாகேந்திரனை அந்த பதவியில் இருந்து விடுவித்து, கேரள மாநில ஆளுநராக நியமிக்க இருப்பதாகவும், கேரள மாநிலத்தின் ஆளுநராக இருந்து வரும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை தமிழகத்தின் ஆளுநராக நியமிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இருமுறை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து சென்றிருந்தார்.
அமித் ஷா வருகையின் பின்னணி என்ன
அப்போது, தேர்தல் வியூகங்கள் தொடர்பாகவும், தொகுதிகள், வேட்பாளர்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு இருந்தார். தற்போது, நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சரின் தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அத்துடன் தமிழக பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியது, அவர் பாஜக மீது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது ஆகியவையும் அமித் ஷா வருகைக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: இந்திய கம்யூ. கட்சியின் அமைப்பு விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர் சி.மகேந்திரன்.. வீரபாண்டியன் காட்டம்!