அம்மா உணவக இட்லி திருட்டுத்தனமாக விற்பனை.. இரு ஊழியர்கள் பதவி காலி.. நெல்லை நகராட்சி இயக்குநர் அதிரடி!
Thoothukudi Amma Unavagam: தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தின் இட்லியை தனியார் உணவகத்துக்கு விற்பனை செய்ததாக இரு பெண் ஊழியர்களை பணி நீக்கம் செய்து திருநெல்வேலி மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் அதிரடியாக உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மாநிலம் முழுவதும் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. தற்போதும் செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில், தினந்தோறும் இட்லி, பல்வேறு வகையான சாதம், சப்பாத்தி உள்ளிட்ட உணவு வகைகள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், பொதுமக்கள் மத்தியில் அம்மா உணவகம் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் அருகே அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்திலும் குறைந்த விலையில் உணவுகள் வழங்கப்படுவதால் அந்தப் பகுதி மக்கள் தினந்தோறும் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த அம்மா உணவகத்தில் தயார் செய்யப்படும் இட்லி தனியார் உணவகங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதன் காரணமாக அம்மா உணவகத்தில் சாப்பிட வரும் நபர்களுக்கு இட்லி கிடைப்பதில்லை எனவும் புகார் எழுந்தது.
கோவில்பட்டி அம்மா உணவகத்தில் அதிகாரி திடீர் ஆய்வு
இந்த புகார் நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் கவனத்துக்கு சென்ற நிலையில், நேற்று வியாழக்கிழமை திடீரென கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது அம்மா உணவகத்தில் வழங்கப்படும் உணவு வகைகளை பார்சல் கட்டி வழங்க கூடாது என்று தெரிவித்தார். மேலும், தயார் செய்யப்படும் உணவுகளை தரமாகவும், ஆரோக்கியமாகவும் தயாரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
மேலும் படிக்க : தவெக அரசு மீதான குதிரைபேர புகார் வழக்கு.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!




அம்மா உணவக ஊழியர்கள் இருவர் பணி நீக்கம்
அத்துடன், இட்லியை தனியார் உணவகத்திற்கு விற்பனை செய்வதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், அம்மா உணவகத்தில் தயார் செய்யப்பட்ட இட்லியை தனியார் உணவகத்திற்கு விற்பனை செய்ததாக இரு ஊழியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, அம்மா உணவக ஊழியர்களான கங்கா மற்றும் சங்கரேஸ்வரி ஆகியோரை பணி நீக்கம் செய்து நெல்லை மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் ரவிச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
அம்மா உணவகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்
மேலும், சம்பந்தப்பட்ட அம்மா உணவகத்தில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அம்மா உணவகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் உணவுகள் பார்சல் வழங்கப்படாது எனவும், புகார் தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் குறித்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இது தொடர்பாக நகராட்சி கமிஷனர் சுகந்தி கூறுகையில், அம்மா உணவகம் உணவு தயாரிப்பு மற்றும் விற்பனை மகளிர் சுய உதவிக் குழு மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த புகாரை தொடர்ந்து இரு ஊழியர்கள் மகளிர் சுய உதவி குழு தீர்மானம் மூலமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க : கோடை ஸ்பெஷல்.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை சிறப்பு ரயில் இயக்கம்.. விவரம் உள்ளே..