ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு இனி கட்டாயம்.. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு!
ரேஷன் விநியோகத்தில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், தகுதியான பயனாளிகளுக்குச் சரியாகப் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யவும் கூட்டுறவுத்துறை தற்போது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்களது கைவிரல் ரேகைப் பதிவை ரேஷன் கடைகளில் வழங்கி அதனை உறுதி செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜுன் 19: தமிழகத்தில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு கூட்டுறவுத்துறை மிக முக்கியமான புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகை பதிவை உறுதி செய்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தற்போது 2.20 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. சுமார் 24,924 ரேஷன் கடைகள் மூலமாக 1.11 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் ரேஷன் பொருட்களைப் பெற்றுப் பயன்பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க: சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்.. வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை.. 3 பேர் கைது!!
ரேஷன் கார்டில் நீக்கப்படாத பெயர்கள்:
இந்நிலையில், பல ரேஷன் கார்டுகளில் ஏற்கனவே உயிரிழந்த நபர்களின் பெயர்கள் இன்னும் நீக்கப்படாமல் அப்படியே இடம்பெற்றிருப்பதாகக் கூட்டுறவுத்துறைக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெயர்கள் மாறி இருப்பதன் காரணமாக இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், சில மாவட்டங்களில் ரேஷன் கார்டுகளுடன் ஆதார் எண்கள் சரியாக இணைக்கப்படாமலும், விரல் ரேகை பதிவு இல்லாமலும் தொடர்ந்து ரேஷன் பொருட்கள் வாங்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
முறைகேடுகளைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்கள்:
ரேஷன் விநியோகத்தில் நடக்கும் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கவும், தகுதியான பயனாளிகளுக்குச் சரியாகப் பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்யவும் கூட்டுறவுத்துறை தற்போது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் உள்ள ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தங்களது கைவிரல் ரேகைப் பதிவை ரேஷன் கடைகளில் வழங்கி அதனை உறுதி செய்வது அவசியமாக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்கள் பட்டியலை சேகரிக்க உத்தரவு:
இதுவரை ஆதார் எண் இணைக்காத நபர்கள் உடனடியாக தங்களது ஆதார் விவரங்களை ரேஷன் கார்டுடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கார்டில் உள்ள இறந்த நபர்களின் ஆதார் விவரங்களைப் பெற்று, அவற்றை முறையாக அறிக்கையாக அனுப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக அதிகாரிகள் களத்தில் இறங்கி, இறந்தவர்களின் பட்டியலைச் சேகரித்து அவர்கள் பெயர்களை நீக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெற்ற மகளுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. ஆட்டோ ஓட்டுநரான தந்தை அதிரடி கைது.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!
எனவே, வரும் நாட்களில் ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ரேஷன் கடைகளுக்குச் சென்று தங்களது ஆதார் எண் இணைப்பு மற்றும் கைரேகை பதிவைச் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் என்று கூட்டுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.