AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்.. வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை.. 3 பேர் கைது!!

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர், படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளியை மீட்டு, சிகிச்சைக்காக உடனடியாக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

சந்தேகத்தால் நேர்ந்த கொடூரம்.. வடமாநிலத் தொழிலாளி அடித்துக் கொலை.. 3 பேர் கைது!!
மாதிரிப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 19 Jun 2026 07:20 AM IST

வேலூர், ஜுன் 19: வேலூரில் சந்தேகத்தின் பேரில் வடமாநிலத் தொழிலாளி ஒருவரைப் பொதுமக்கள் மிகக் கொடூரமான முறையில் தாக்கியதில், அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனை கழிவறையிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கு தொடர்பாகப் போலீசார் 3 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோகிந்த் முண்டா (40). இவர் வேலை நிமித்தமாக வேலூருக்கு வந்து, அங்கு தங்கித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு சுமார் 10 மணி அளவில், வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் அருகே ஜோகிந்த் முண்டா நின்று கொண்டிருந்தார்.

மேலும் படிக்க: பெற்ற மகளுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. ஆட்டோ ஓட்டுநரான தந்தை அதிரடி கைது.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!

சரமாரியாக தாக்கிய பொதுமக்கள்:

அப்போது அவர் கடுமையான மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது தடுமாற்றமான நடையையும் சந்தேகத்திற்குரிய நடமாட்டத்தையும் கவனித்த அங்கிருந்த பொதுமக்கள், அவர் ஏதோ திருடும் நோக்கத்தில் அங்கு வந்துள்ளார் எனத் தவறாகக் கணித்துள்ளனர். தமிழ் தெரியாததால் தற்காப்புக்காகப் பேசக் கூட முடியாத நிலையில் இருந்த ஜோகிந்த் முண்டாவை, திருடன் என முடிவு செய்த அப்பகுதி மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு சூழ்ந்து கொண்டனர். அவர் எவ்வளவோ கெஞ்சியும் கேளாமல், அங்கிருந்தவர்கள் அவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். பொதுமக்களின் இந்தக் கொடூரத் தாக்குதலில் ஜோகிந்த் முண்டா உடல் முழுவதும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

மருத்துவமனையில் நேர்ந்த பரிதாப சாவு:

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் காவல்துறையினர், படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளியை மீட்டு, சிகிச்சைக்காக உடனடியாக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், தீவிர மதுபோதை மற்றும் பயத்தின் காரணமாக அவர் மருத்துவர்களின் சிகிச்சைக்கு முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் அவர் தொடர்ந்து மருத்துவமனைக் கண்காணிப்பிலேயே வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அதிகாலை 3 மணி அளவில் அவர் மருத்துவமனையில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அவர் சென்று வெகுநேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கழிவறையிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. தாக்குதலில் ஏற்பட்ட உள் காயங்கள் மற்றும் அதிர்ச்சியே அவரது மரணத்திற்குக் காரணம் எனக் கருதப்படுகிறது.

போலீசார் தீவிர விசாரணை:

இக்கொடூரக் கொலை சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர் திருடன் இல்லை என்பதும், பொதுமக்கள் தவறான சந்தேகத்தால் அவரை அடித்துக் கொன்றுள்ளனர் என்பதும் உறுதியாகியுள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், “ஜோகிந்த் முண்டா வேலூருக்கு வேலைக்காக வந்தாரா அல்லது மருத்துவச் சிகிச்சைக்காக வந்தாரா என்ற கோணத்திலும், அவரை மொத்தம் எத்தனை பேர் சேர்ந்து தாக்கினார்கள் என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.

தற்போது சந்தேகத்தின் பேரில் 3 பேரைப் பிடித்துக் கைது செய்துள்ளோம். மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். பிரேதப் பரிசோதனை (Post-mortem) அறிக்கை வந்த பிறகே அவரது மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும்” என்றனர்.

மேலும் படிக்க: தீராத சொத்து தகராறு.. சேரன்மகாதேவியில் தம்பியின் சொகுசு காருக்கு தீ வைப்பு.. அண்ணன் அதிரடி கைது!

காவல்துறையின் இறுதி எச்சரிக்கை:

யாரேனும் புதிய நபர்கள் சந்தேகப்படும்படியாகத் திரிந்தால், பொதுமக்கள் ஒருபோதும் சட்டத்தைத் தன் கையில் எடுக்கக் கூடாது என்றும், உடனடியாக காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர உதவி எண்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், மீறி வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான கொலை வழக்குப் பாயும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

Follow Us