தமிழக சட்டப்பேரவையில் 4 ஆண்டுகளுக்குப் பின் நடந்த மாற்றம்.. பொறுப்பு ஆளுநர் அர்லேகர் புதிய சாதனை!
சமீபத்தில் ஆர்.என்.ரவி மேற்கு வங்காள ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இன்று த.வெ.க அரசின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்ற ஆளுநர் அர்லேகர், ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டிருந்த அரசின் கொள்கை விளக்க உரையை எவ்விதத் தடையுமின்றி, வரிகளைத் தவிர்க்காமல் முழுமையாக வாசித்து முடித்தார்.
சென்னை, ஜுன் 18: தமிழக சட்டப்பேரவையில் கடந்த நான்கு ஆண்டுகளாக நீடித்து வந்த ‘ஆளுநர் உரை’ சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று நடைபெற்ற 17-வது கூட்டத்தொடரில் ஆளுநர் உரை முழுமையாக வாசித்து முடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர், இன்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரின் உரையுடன் முறைப்படி தொடங்கியது. இதையொட்டி, இன்று காலை 9.55 மணியளவில் சட்டமன்ற வளாகத்திற்கு ஆளுநர் வருகை தந்தார். தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டட இரண்டாவது நுழைவாயிலில் அவருக்குக் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவைச் செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்று அவைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிக்க: தமிழக சட்டப்பேரவையில் இருக்கைகள் ஒதுக்கீடு.. முதலிடத்தில் உதயநிதி ஸ்டாலின்.. 5வது இடத்தில் இபிஎஸ்!
கடந்த 4 ஆண்டுகால சர்ச்சைகளின் பின்னணி:
கடந்த திமுக ஆட்சியின் போது, தமிழக ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவிக்கும் ஆளும் அரசுக்கும் இடையே ஏற்பட்ட பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக, தொடர்ந்து 4 முறை ஆளுநர் உரை முழுமையாக வாசிக்கப்படாமல் முடங்கியது. அதன் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம். 2022ம் ஆண்டு ஆளுநராகப் பொறுப்பேற்றிருந்த ஆர்.என்.ரவி, அந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரில் அரசின் உரையை எவ்விதத் தடையுமின்றி முழுமையாக வாசித்தார்.
தொடர்ந்து, 2023ம் ஆண்டின் உரையில் இடம் பெற்றிருந்த ‘மகளிர் முன்னேற்றம்’, ‘மதச்சார்பின்மை’, ‘சுயமரியாதை’, மற்றும் பெரியார், அம்பேத்கர், கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்களின் பெயர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல் தவிர்த்தார். இதற்கு அன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவையிலேயே கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்ததால், ஆளுநர் பாதியிலேயே அவையை விட்டு வெளியேறினார்.
அடுத்தடுத்து ஆளுநர் உரையில் சர்ச்சை:
அதனைத்தொடர்ந்து, 2024ம் ஆண்டு கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ‘தமிழழ்த்தாய் வாழ்த்து’ மட்டும் பாடப்பட்டு, ‘தேசிய கீதம்’ இறுதிக்குப் பட்டியலிடப்பட்டதைக் காரணம் காட்டி, ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆர்.என்.ரவி புறக்கணித்துச் சென்றார். பின்னர் 2025ம் ஆண்டும் முந்தைய ஆண்டைப் போலவே தேசிய கீத மரபுகளைக் காரணம் காட்டி, இரண்டாவது முறையாக ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து, 2026 இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் இதே காரணத்தை முன்வைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை முழுமையாக வாசிக்கவில்லை.
மாற்றத்தைக் கொண்டுவந்த பொறுப்பு ஆளுநர்:
சமீபத்தில் ஆர்.என்.ரவி மேற்கு வங்காள ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இன்று த.வெ.க அரசின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்ற ஆளுநர் அர்லேகர், ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டிருந்த அரசின் கொள்கை விளக்க உரையை எவ்விதத் தடையுமின்றி, வரிகளைத் தவிர்க்காமல் முழுமையாக வாசித்து முடித்தார். இதன் மூலம் கடந்த 2023-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு தொடக்கம் வரை 4 முறை அரைகுறையாக நின்ற ஆளுநர் உரை மரபு, 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முழுமையடைந்துள்ளது.
இதையும் படிக்க: “வாயத் திறங்க CM”.. கறுப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றம் வந்த திமுக எம்எல்ஏக்கள்.. முதல்வருக்கு எதிராக கோஷம்!!
புதிய தவெக அரசின் முதல் கூட்டத்தொடரிலேயே ஆளுநருக்கும் ஆளும் தரப்பிற்கும் இடையே சுமுகமான சூழல் நிலவுவது, தமிழக அரசியல் வட்டாரத்தில் ஆரோக்கியமான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.