தமிழக சட்டப்பேரவையில் இருக்கைகள் ஒதுக்கீடு.. முதலிடத்தில் உதயநிதி ஸ்டாலின்.. 5வது இடத்தில் இபிஎஸ்!
TN Assembly: தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான ஆளுங்கட்சி தரப்பிலும் முதல் வரிசை இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் இருக்கையில் தமிழக முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து, அடுத்தடுத்த இருக்கைகளில் தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.
சென்னை, ஜுன் 18: தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில், பேரவை வளாகத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கான அதிகாரப்பூர்வ இருக்கை ஒதுக்கீடு தற்போது செய்யப்பட்டுள்ளது. இதில் முக்கிய திருப்பமாக, அதிமுகவின் சட்டமன்றக் குழு தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல் வரிசையில் 5-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர், இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி நடந்து வருகிறது.
இதையும் படிக்க: “வாயத் திறங்க CM”.. கறுப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றம் வந்த திமுக எம்எல்ஏக்கள்.. முதல்வருக்கு எதிராக கோஷம்!!
சுவாரசியமான எதிர்க்கட்சி வரிசை:
இந்த 17-ஆவது சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசை மிகவும் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் அமைந்துள்ளது. அதன்படி, இதில் திமுக பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார். அதிமுகவும் எதிர்க்கட்சி வரிசையிலேயே அமர்கிறது. அதன் சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். 1967-ஆம் ஆண்டிற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தவெக அரசின் அமைச்சரவையில் நேரடியாகப் பங்குபெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சி வரிசையில் யாருக்கு எந்த இடம்?
அதன்படி, எதிர்க்கட்சிகள் அமரும் முதல் வரிசையில் புதிய மாற்றங்களுடன் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் இருக்கை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள திமுகவின் உதயநிதி ஸ்டாலின், இரண்டாவது இருக்கையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என்.நேரு (திமுக), மூன்றாவது இருக்கையில் ஏ.வா.வேலு (திமுக எம்.எல்.ஏ), நான்காவது இருக்கையில் கோவி.செழியன் (திமுக எம்.எல்.ஏ), ஐந்தாவது இருக்கையில் எடப்பாடி பழனிசாமி (அதிமுக சட்டமன்றக் குழு தலைவர்) அமர வைக்கப்பட்டுள்ளனர்.
எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.எஸ்.மணியன் (6-வது இடம்) மற்றும் அக்ரி கிருஷ்ணமூர்த்தி (7-வது இடம்) ஆகியோருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியின் (PMK) சட்டமன்றக் குழு தலைவர் சௌமியா அன்புமணிக்கு 8-வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் திமுக, அதிமுக, பாமக, பாஜக, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் (CPI), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (CPIM), மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK) உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கும் முதல் வரிசையில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆளுங்கட்சி வரிசையில் இருக்கை ஒதுக்கீடு:
தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைமையிலான ஆளுங்கட்சி தரப்பிலும் முதல் வரிசை இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் இருக்கையில் தமிழக முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து, அடுத்தடுத்த இருக்கைகளில் தவெக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.
இதையும் படிக்க: “அமைச்சரும், எம்எல்ஏக்களும் வேறு வேறு கிடையாது.. அனைவரும் சமம்”.. முதல்வர் விஜய் நெகிழ்ச்சி!!
கூட்டணி அமைச்சர்களுக்கு முதல் இருக்கை:
அதோடு, ஆளுங்கட்சியின் முதல் வரிசையிலேயே கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களான காங்கிரஸ் கட்சியின் விஷ்ணுபிரசாத், ராஜேஷ்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு மற்றும் ஐ.யு.எம்.எல் (IUML) கட்சியின் அமைச்சர் ஷாஜகான் ஆகியோருக்கும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நடைபெற்ற நம்பிக்கைத் தீர்மானத்தின் போது இந்த அதிகாரப்பூர்வ இருக்கை ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது 17-வது கூட்டத்தொடர் தொடங்கி முறைப்படி இருக்கைகள் ஒதுக்கப்பட்டு உறுப்பினர்கள் அமர்ந்துள்ளனர்.