“வாயத் திறங்க CM”.. கறுப்பு பேட்ஜ் அணிந்து சட்டமன்றம் வந்த திமுக எம்எல்ஏக்கள்.. முதல்வருக்கு எதிராக கோஷம்!!
சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தனர். திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கையில் கண்டன பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக் களத்திற்கு வந்தார்.
சென்னை, ஜுன் 18: “வாயை திறங்க CM” என்ற வாசகம் பொறித்த கறுப்பு பேட்ஜ் அணிந்தபடி திமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்திற்கு வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, கடந்த மே மாதம் 10-ஆம் தேதி தமிழக முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதற்குப் பிறகான 17-ஆவது சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத்தொடர், இன்று காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது. தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று காலை 9.55 மணியளவில் சட்டமன்ற வளாகத்திற்கு வருகை தந்துள்ளார். தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டட இரண்டாவது நுழைவாயிலில் அவருக்குக் காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவைச் செயலாளர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து ஆளுநரை வரவேற்று அவைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிக்க: “அமைச்சரும், எம்எல்ஏக்களும் வேறு வேறு கிடையாது.. அனைவரும் சமம்”.. முதல்வர் விஜய் நெகிழ்ச்சி!!
எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆளுநர் உரை
கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சிக் காலத்தில், ஆளுநருக்கும் அன்றைய அரசுக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகளால் ஆளுநர் உரை முழுமையாக வாசிக்கப்படாமல் சபாநாயகரால் வாசிக்கப்படும் சூழல் நீடித்தது. குறிப்பாக, கூட்டத்தொடரின் தொடக்கத்தில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடுவதா அல்லது ‘தேசிய கீதம்’ இசைக்கப்படுவதா என்ற சர்ச்சை நீடித்து வந்தது. இந்தச் சூழலில் புதிய அரசு அமைந்துள்ளதால், இன்றைய ஆளுநர் உரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆளுநர் உரையில், புதிய தவெக அரசின் கொள்கைகள், வரவிருக்கும் ஆண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
எதிர்க்கட்சிகளின் வியூகம்:
இதனிடையே, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு எதிராக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று பேரவை வளாகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாகக் கூறி, திமுக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
கருப்பு பேட்ஜ் அணிந்து வந்த திமுக எம்.எல்.ஏ-க்கள்:
VIDEO | Tamil Nadu Assembly Session: LoP Udhayanidhi Stalin leads protest outside the Assembly. #TamilNaduAssembly
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/kcabdLfGrG
— Press Trust of India (@PTI_News) June 18, 2026
சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய போது, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது சட்டைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்தனர். திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கையில் கண்டன பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக் களத்திற்கு வந்தார். அந்த பதாகைகளில், “ரீல்ஸ் இங்கே! ரியல் எங்கே?”, “கதறல் கேட்குதா சிஎம்?” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டு, தமிழக அரசை சாடும் வகையில் அமைந்திருந்தன.
விஜய் அரசுக்கு எதிராக அதிரடி முழக்கங்கள்:
பேரவை நுழைவாயில் முன்பு திரண்ட திமுக எம்.எல்.ஏ-க்கள், தவெக அரசுக்கு எதிராகவும் முதலமைச்சர் விஜய்க்கு எதிராகவும் அடுக்கடுக்கான கோஷங்களை எழுப்பினர். “வாயைத் திறங்க சிஎம்!” தமிழகத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு முதலமைச்சர் விஜய் வாய் திறக்க வேண்டும் என தொடர்ந்து முழக்கமிட்டனர். “கெட்டுப்போச்சு கெட்டுப்போச்சு.. சட்டம் ஒழுங்கு கெட்டுப்போச்சு!” என தமிழகத்தின் தற்போதைய பாதுகாப்பு சூழலை விமர்சித்தனர்.
இதையும் படிக்க: “அவங்க 2 பேரும் மதிமுக எம்எல்ஏக்களே இல்ல”.. பரபரப்பை கிளப்பிய துரை வைகோ!!
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு:
தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு எங்கே போச்சு? என கேள்வி எழுப்பியதோடு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக நீதி வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் பேரவைக் கூட்டத்தொடரிலேயே, எதிர்க்கட்சியான திமுக இப்படி ஒரு அதிரடி போராட்டத்தை கையில் எடுத்து பேரவை வளாகத்தையே அதிர வைத்திருப்பது ஒட்டுமொத்த தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.