தூத்துக்குடியில் போலீசாரை அரிவாளால் வெட்டிய குண்டு வீச்சு கும்பல்.. மூவர் அதிரடி கைது.. தப்பியோடிய இருவருக்கு மாவுக்கட்டு!
Thoothukudi Police Sickle Attack: தூத்துக்குடி மாவட்டத்தில் மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய கும்பலை கைது செய்த சென்ற போலீசார் மீது அரிவாளால் தாக்குதல் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், நேரு காலனி பகுதியில் வசித்து வரும் ஒரு தொழிலாளியின் வீட்டில் மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை தீ பற்ற வைத்து வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் வடபாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், தொடர்புடைய நபர்கள் அந்த பகுதியில் உள்ள சுந்தரவேல் கல்லறை தோட்ட காட்டுப்பகுதியில் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ், காவலர் மீனாட்சி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு, அவர்களை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த கும்பல் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் எஸ்ஐ மாணிக்கராஜ் மற்றும் காவலர் மீனாட்சி ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியது.
17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது
உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் வெட்டுக்காயம் ஏற்பட்ட நிலையிலும் அந்த கும்பலை பிடிப்பதற்காக துரத்தி சென்றனர். இதில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக், தினேஷ் மற்றும் 17 வயது சிறுவன், கார்த்திக், விக்னேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் சம்பவ இடத்திலேயே அதிரடியாக கைது செய்தனர். மேலும், இவர்களுடன் தொடர்புடையதாக விக்னேஷ் என்ற நபரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: தீராத சொத்து தகராறு.. சேரன்மகாதேவியில் தம்பியின் சொகுசு காருக்கு தீ வைப்பு.. அண்ணன் அதிரடி கைது!




காயமடைந்த காவலர்களுக்கும் சிகிச்சை
அங்கு, அவர்கள் தப்பி சென்று விடாமல் இருப்பதற்காக மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளிகள் அரிவாளால் தாக்கியதில் வெட்டு காயம் ஏற்பட்ட உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் காவலர் மீனாட்சி ஆகியோர் இதை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் போலீசார் மீது கும்பல் அரிவாளால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை
மேலும், தொழிலாளி வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு எதற்காக வீசப்பட்டது. அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார். போலீசார் மீது தாக்குதல் நடத்திய கும்பலுக்கு பின்னால் வேறு எவரும் உள்ளனரா என்பன உள்ளிட்ட கோணங்களில் தூத்துக்குடி மாவட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: பெற்ற மகளுக்கு 5 ஆண்டுகளாக பாலியல் தொல்லை.. ஆட்டோ ஓட்டுநரான தந்தை அதிரடி கைது.. புதுச்சேரியில் அதிர்ச்சி சம்பவம்!