AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குற்றாலம் – மேலகரம் சாலையில் திடீர் கடைகளால் போக்குவரத்து நெரிசல்

Sudden Shops on Courtallam Road: மேலகரம் முதல் குற்றாலம் மற்றும் நன்னகரம் வரையிலான பிரதான சாலையின் இருபுறங்களிலும் திடீர் கடைகள் முளைத்துள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த கடைகளில் பொருட்கள் வாங்குபவர்கள் தங்களது வாகனங்களைச் சாலையிலேயே நிறுத்துவதால், பாதசாரிகளும் மற்ற வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

குற்றாலம் – மேலகரம் சாலையில் திடீர் கடைகளால் போக்குவரத்து நெரிசல்
சாலை ஆக்கிரமிப்பு
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 18 Jun 2026 13:30 PM IST

தென்காசி மாவட்டம் மேலகரம் முதல் உலகப் புகழ்பெற்ற குற்றாலம் வரையிலான பிரதான சாலையின் இருபுறங்களிலும் சமீபகாலமாக ஏராளமான திடீர் கடைகள் முளைத்து வருகின்றன. முறையான அனுமதியின்றியும், சாலைப் பகுதிகளை ஆக்கிரமித்தும் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய கடைகளின் வரவால், இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குற்றாலப் பருவமழைக் காலங்களில் வழக்கமாகவே வாகனப் போக்குவரத்து அதிகமாக இருக்கும் சூழலில், இந்த திடீர் கடைகள் சாலையின் அகலத்தைக் குறைத்து, ஒட்டுமொத்தப் போக்குவரத்தையும் ஸ்தம்பிக்கச் செய்து விடுகின்றன என்று உள்ளூர் மக்களும் வாகன ஓட்டிகளும் வேதனை தெரிவிக்கின்றனர்.

விதிமீறல்களும் தொடரும் விபத்து அபாயமும்

இந்த பிரதான சாலையை ஒட்டி புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கடைகளில் பொருட்கள் வாங்குவதற்காக வரும் பொதுமக்கள், தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களைச் சாலையிலேயே குறுக்காகவும், அத்தவறாகவும் நிறுத்திச் செல்கின்றனர். இதனால், அந்த வழியாகச் செல்லும் மற்ற வாகனங்களுக்குப் போதிய இடவசதி இல்லாமல் முடங்கும் நிலை ஏற்படுகிறது. மேலும், சாலையில் நடந்து செல்பவர்களும், அவசரத்தில் வாகனங்களை இயக்குபவர்களும் போக்குவரத்து விதிகளை மீற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். அவ்வாறு விதிமீறல்களில் ஈடுபடும் போது, எதிரே அதிவேகமாக வரும் பிற வாகனங்கள் எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதி கீழே தள்ளும் ஆபத்தான சூழல் நிலவுகிறது. ஆங்காங்கே சிறு சிறு விபத்துக்கள் ஏற்கனவே நடைபெறத் தொடங்கியுள்ளதால், பெரிய அளவிலான உயிர்ச்சேதங்கள் ஏற்படும் முன்பாக இதனைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நன்னகரம் – மேலகரம் பகுதியில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்

குறிப்பாக, நன்னகரம் பகுதியிலிருந்து மேலகரம் டாக்டர் சுருதி கிளினிக் வரையிலான இடைப்பட்ட சாலைப் பகுதியில், சாலையின் இரு பக்கங்களிலும் மிகக் குறுகிய கால இடைவெளியில் ஏராளமான தற்காலிகக் கடைகள் திடீரென முளைத்திருக்கின்றன. பழக்கடைகள், சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை செய்யும் இந்த கடைகள் அனைத்தும் சாலையோர நடைபாதைகளை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன. இதனால் பாதசாரிகள் நடக்கக் கூட இடமில்லாமல், உயிருக்கு அஞ்சியபடி பிரதான சாலையின் நடுவே நடந்து செல்ல வேண்டிய அவல நிலை நீடித்து வருகிறது.

அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் வைக்கும் அவசரக் கோரிக்கை

தற்போது மாவட்டத்திற்குப் பொறுப்பேற்றுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் (District Collector) மற்றும் புதிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் இப்பகுதியில் நேரில் வந்து கள ஆய்வு (Inspection) மேற்கொண்டு, விதிமீறிச் செயல்படும் கடைகள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வற்புறுத்தி உள்ளனர்.

Follow Us