தவெக கூட்டணியில் மதிமுக? வைகோவுக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பொறுப்பு.. விஜய்யின் பிரம்மாண்ட ஆஃபர்?
MDMK Join TVK Alliance: தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் மதிமுக இணைய இருப்பதாகவும், இதற்காக அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் ஏராளமான கட்சிகளை சேர்ந்தவர் இணைந்து வருகின்றனர். தேர்தலுக்கு முன்னதாக தமிழக வெற்றிக்கழகத்துடன் கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று விஜய் தெரிவித்து இருந்தார். ஆனால், எந்த கட்சிகளும் கூட்டணிக்கு வராத நிலையில், தற்போது தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தவெக உருவெடுத்த நிலையில், அந்த கட்சியின் கூட்டணியின் இணைவதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் இருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தவெக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. இதே போல, விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சியும் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்றாலும், தமிழக வெற்றிக்கழக அரசுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்து வருகிறது.
தவெக கூட்டணியில் இணையும் மதிமுக
இதில், காங்கிரஸ் கட்சி அதிரடியாக திமுக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தமிழக வெற்றிக்கழக கூட்டணியில் இணைந்தது. இதே போல, விடுதலை சிறுத்தைகள் கட்சியும் திமுக கூட்டணியை முறித்து, தவெக கூட்டணியில் இணையும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழக வெற்றிக்கழக அரசை கடந்த சில நாட்களாக புகழ்ந்து பேசி வருகிறது.
மேலும் படிக்க : பெரம்பூர் டூ திருச்சி கிழக்கு… முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் 4 பேர் வழக்கு!




கூட்டணிக்கு அச்சாரமாக அமைந்த சந்திப்புகள்
அந்த வகையில், நேற்று முன்தினம் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, தவெக தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா சந்தித்து பேசி இருந்தார். இதன் தொடர்ச்சியாக, நேற்று முதல்வர் ஜோசப் விஜயை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்திருந்தார். இந்த சந்திப்பானது சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது. இந்த சந்திப்பின் பின்னணியில் தமிழக வெற்றிக்காக கூட்டணியில், மதிமுக இணைய இருப்பதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற ஜூன் 27- ஆம் தேதி நடைபெற உள்ள மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வைகோ நியமிக்க வாய்ப்பு
அத்துடன், சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக எம்எல்ஏக்கள் இருவரும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் மதிமுக அதிகாரப்பூர்வமாக இணைவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற பதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் ஆடை விளம்பரமே செய்தியாக வருகிறது… மு. க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!