பெரம்பூர் டூ திருச்சி கிழக்கு… முதல்வர் விஜய் வெற்றியை எதிர்த்து நீதிமன்றத்தில் 4 பேர் வழக்கு!
CM Vijay Four Election Cases File : பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் வெற்றியை எதிர்த்து 4 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்த விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏ பதவியே தக்க வைத்துக் கொண்டார். இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், விஜய் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதே போல, பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் முதல்வர் விஜயின் வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் ஆர். டி. சேகர், அந்த தொகுதி வாக்காளர்கள் தினேஷ் மற்றும் லட்சுமி நரசிம்மன் ஆகிய 3 பேர் தேர்தல் வழக்கை தொடர்ந்துள்ளனர். இதனால், முதல்வர் விஜய்க்கு எதிராக 4 தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவெக அமைச்சர்கள் – எம்எல்ஏக்கள் மீது தேர்தல் வழக்கு
இதே போல, சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக அந்த தொகுதியின் வாக்காளர் சிவராஜ் என்பவரும், ஆர். கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ மருது கணேசன், திருவெறும்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் நவல்பட்டு விஜி எம்எல்ஏவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும் படிக்க: சர்வதேச தரத்தில் சென்னைக்கு 3ஆவது மாஸ்டர் பிளான் திட்டம்.. அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி அறிவுறுத்தல்!!




மொத்தமாக 16 தேர்தல் வழக்குகள் தாக்கல்
இதே போல, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தின் எம்எல்ஏவான சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து திமுகவின் முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பனும், விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற சிவி சண்முகத்துக்கு எதிராக அந்த தொகுதியின் வாக்காளர் பெரியசாமி உள்பட சுமார் 16 தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
60 நாள்களுக்குள் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டும்
இந்த வழக்குகள் தொடர்பாக எண்கள் பட்டியலிடப்பட்டு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால் 60 நாட்களுக்குள் செய்ய வேண்டும். தற்போது, தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்கள் விரைவில் நிறைவடைய உள்ளன. இந்த நிலையில், பல்வேறு தொகுதிகளில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் ஆடை விளம்பரமே செய்தியாக வருகிறது… மு. க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!