தீயணைப்புத்துறை ஆணைய தலைவர் சங்கர் ஜிவால் திடீர் ராஜினாமா.. மேலும் 5 அதிகாரிகள் பணி விலகல்.. என்ன காரணம்!
Shankar Jiwal Resigned : தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் ஆணையத் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் ராஜினாமா செய்துள்ளார். இதேபோல, மேலும் 5 அதிகாரிகள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக கடந்த 2023- ஆம் ஆண்டு சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். இவரது பதவிக்காலம் கடந்த 2025- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இவர், ஓய்வு பெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக அப்போதைய திமுக அரசு அவருக்கு புதிய பொறுப்பு ஒன்றை வழங்கியது. அதில், தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் ஆணைய தலைவராக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார். அதாவது, தமிழக காவல்துறை ஆணையம் போல, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு புதிய ஆணையம் ஒன்று உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் தலைவராக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டிருந்தார். கடந்த 2025 செப்டம்பர் மாதம் புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்ட சங்கர் ஜிவால் சுமார் 10 மாதங்கள் அந்த பொறுப்பை வகித்து வந்தார்.
தீயணைப்பு துறை ஆணைய தலைவர் ராஜினாமா
இந்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆணைய தலைவர் பொறுப்பில் இருந்து வந்த சங்கர் ஜிவால் தனது பதவியை இன்று புதன்கிழமை ( ஜூன் 17) ராஜினாமா செய்தார். இவருடன் இதே ஆணையத்தில் உறுப்பினர்களாக செயல்பட்டு வந்த சத்தியமூர்த்தி விக்ரம், நமச்சிவாயம் ஆகியோரம் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. இந்த அரசு ஆட்சி அமைத்து ஒரு மாதம் ஆன நிலையில், முன்னாள் டிஜிபியும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் ஆணையருமான சங்கர் ஜிவால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் படிக்க: “வளர்த்த கடா மார்பில் பாய்கிறது!”.. சேர்த்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைப்பாரா?.. விஜயபாஸ்கருக்கு ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி!




சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் ராஜினாமா
இதே போல, சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவராக இருந்து வந்த முன்னாள் டிஜிபி சுனில் குமார் மற்றும் தமிழ்நாடு தகவல் ஆணையராக இருந்து வந்த முன்னாள் டிஜிபி அபய் குமார் சிங் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். தமிழகத்தில் ஒரே நாளில் காவல்துறையின் உயர் அதிகாரிகளாக பணிபுரிந்த 6 பேர் ராஜினாமா செய்திருப்பது பேசும் பொருளாகி உள்ளது.
மேலும் படிக்க: வீ த லீடர்ஸ் இயக்கம் விரைவில் கட்சியாக மாறும்; முதல் பாட்காஸ்டில் அண்ணாமலை சொன்ன முக்கிய தகவல்