“வளர்த்த கடா மார்பில் பாய்கிறது!”.. சேர்த்த சொத்துக்களை கட்சிக்கு எழுதி வைப்பாரா?.. விஜயபாஸ்கருக்கு ஆர்.பி.உதயகுமார் சரமாரி கேள்வி!
ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஏமாற்றிப் பதவிகளை வாங்கி, சொத்து சுகங்களைச் சேர்த்துவிட்டு, கட்சிக்கு ஒரு தோல்வி என்று வரும்போது காட்டிக் கொடுத்துவிட்டு ஓடும் இத்தகைய சுயநலவாதிகளை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் ஆன்மாக்கள் சும்மா விடாது என்று ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார்.
சென்னை, ஜுன் 17: அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சி.விஜயபாஸ்கர் நேற்று தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன், அதிமுகவிலிருந்தும் அதிகாரப்பூர்வமாக விலகினார். இந்த அதிரடி அரசியல் திருப்பத்தைத் தொடர்ந்து, அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கடும் கோபத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டு சி.விஜயபாஸ்கருக்குப் பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க: கடையில் பணியாற்றிக்கொண்டு இருந்த சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!
கட்சிக்கு சொத்துக்களை எழுதி வைப்பாரா?
Former AIADMK Minister R.B. Udhayakumar has alleged that C. Vijayabaskar joined TVK in order to protect the assets he had accumulated and to escape the cases pending against him. pic.twitter.com/tsLh4igw67
— Vignesh Theni (@Vignesh_twitz) June 17, 2026
வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசிய ஆர்.பி. உதயகுமார், “இந்தக் கட்சிக்கு விஜயபாஸ்கர் வருவதற்கு முன்பாக அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் இருந்த சொத்துக்கள் எவ்வளவு? இப்போது அவர் வைத்துள்ள சொத்துக்கள் மற்றும் முதலீடுகள் எவ்வளவு? அதிமுகவுக்கு வந்த பின்பு சேர்த்த இந்த ஒட்டுமொத்த சொத்துக்களையும் கட்சிக்கு எழுதி வைத்துவிட்டு அவர் வேறு கட்சிக்கு போவாரா?” என்று தொண்டர்களின் சார்பாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜயபாஸ்கரின் சுயநலம்:
தொடர்ந்து பேசிய அவர், கட்சியில் பெற்ற பதவியும், இரட்டை இலை சின்னத்தில் நின்று பெற்ற வெற்றியும் வேண்டாம் என்று ராஜினாமா செய்துவிட்ட விஜயபாஸ்கர், நியாயப்படி இந்தக் கட்சியில் சேர்வதற்கு முன்பு என்ன நிலையில் இருந்தாரோ, அதே நிலையில்தானே வேறு கட்சிக்குச் செல்ல வேண்டும் என்று சாடினார்.
“அதிமுகவில் இருந்து கொண்டு அனைத்துப் பதவிகளையும், சுகங்களையும் அனுபவித்து, சொத்துக்களையும், முதலீடுகளையும், செல்வாக்கையும் சேர்த்துக் கொண்டீர்கள். எல்லாம் சேர்த்த பிறகு தற்போது கட்சித் தலைமையையும், கட்சியையும் விமர்சித்துவிட்டு, தொண்டர்களையும் மக்களையும் கைவிட்டுச் செல்கிறீர்கள்” என்று தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
வழக்குகளில் இருந்து தப்பிக்கவே இந்த முடிவு:
சி.விஜயபாஸ்கர் தனது சுயநலத்திற்காக, தன் மீது இருக்கும் வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், தனது முதலீடுகளைக் காப்பாற்றிக் கொள்ளவுமே கட்சியைத் காட்டிக் கொடுத்துவிட்டு வேறு கட்சியில் சேர முடிவெடுத்துள்ளார் என்று உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் குறை கூறும் விஜயபாஸ்கர், கடந்த 10 ஆண்டுகளாகப் பதவிகளைப் பெறுவதற்காக என்னென்ன காரியங்களைச் செய்தார் என்பது தங்களுக்குத் தெரியும் என்றும், உண்மைத் தொண்டர்கள் யாரும் ஏமாளிகள் அல்ல என்றும் அவர் அந்த வீடியோவில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
அம்மாவின் ஆன்மா சும்மா விடாது:
ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஏமாற்றிப் பதவிகளை வாங்கி, சொத்து சுகங்களைச் சேர்த்துவிட்டு, கட்சிக்கு ஒரு தோல்வி என்று வரும்போது காட்டிக் கொடுத்துவிட்டு ஓடும் இத்தகைய சுயநலவாதிகளை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரின் ஆன்மாக்கள் சும்மா விடாது என்று ஆர்.பி. உதயகுமார் எச்சரித்துள்ளார். எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைக்கும் கோடிக்கணக்கான அடிமட்டத் தொண்டர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் இந்தச் செயலைத் தொண்டர்கள் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: ஒரு காவலரே இப்படி செய்யலாமா? வைரல் புகைப்படத்தால் வந்த வினை.. நெல்லை எஸ்.பி. போட்ட அதிரடி உத்தரவு!
விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ பதவியைத் துறந்து அதிமுகவில் இருந்து சி.விஜயபாஸ்கர் விலகிய சம்பவம் தமிழக அரசியலிலும், குறிப்பாக அதிமுக வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆர்.பி. உதயகுமாரின் இந்த காரசாரமான வீடியோ தற்போதைய அரசியல் சூழலில் மேலும் தீயாய் பரவி வருகிறது.