ஒரு காவலரே இப்படி செய்யலாமா? வைரல் புகைப்படத்தால் வந்த வினை.. நெல்லை எஸ்.பி. போட்ட அதிரடி உத்தரவு!
Nellai Constable Consumed Toddy : திருநெல்வேலியில் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் கள் அருந்தியதாக சமூகவலைதளங்களில் புகைப்படம் வெளியான நிலையில், அவரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ண குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார் .
தூத்துக்குடி மாவட்டம், செம்பூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் ( 45 வயது). இவர், திருநெல்வேலி மாவட்டம், மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், தலைமைக் காவலர் முருகன் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள கள்ளை தனது நண்பர்களுடன் சேர்ந்து அருந்துவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தமிழக அரசு விதித்துள்ள தடையின் கீழ், தமிழகத்தில் கள் விற்பனை செய்வதற்கும், தடையை மீறி கல் அருந்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலைமை காவலர் முருகன் தனது நண்பர்களுடன் இணைந்து தடை செய்யப்பட்ட கள்ளை அருந்தியதாக தெரிகிறது. அவர் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் கேனில் கள் அருந்தும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், இது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு நெல்லை மாவட்ட காவல் துறை உயர் அதிகாரி உத்தரவிட்டார்.
தலைமைக் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்
அதன்படி, தலைமை காவலர் முருகன் தொடர்பாக காவல்துறை தரப்பில் துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. இதில், தலைமை காவலர் முருகன் கள் அருந்தியது உறுதி செய்யப்பட்டது. அதன்படி, முருகனை நெல்லை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் பிரசண்ண குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், கள் அருந்துவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்.. 46 ஆயிரம் அட்டைகள் தயார்.. முதல்வர் விஜய் எடுக்கும் மூவ்!




தமிழகத்தில் கள் விற்பனை தடையை நீக்க கோரிக்கை
தமிழகத்தில் கள் விற்பனை மீதான தடையை நீக்கி கள்ளு கடைகள் திறக்கப்பட்டு விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பனை விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக, பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் மதுக்கடைகளால் ஏற்படும் குற்ற சம்பவங்களை குறைப்பதற்காக டாஸ்மாக்குக்கு பதிலாக கள்ளு கடைகளை திறந்து விற்பனை செய்யலாம் என்று பல தரப்பில் இருந்து குரல் எழுந்து வருகிறது.
அரசின் தடையை மீறிய காவலரால் பரபரப்பு
இருந்தாலும் தமிழகத்தில் பனை மரத்தில் இருந்து கள் இறக்குவது, கள் விற்பனை செய்வது, கள் அருந்துவது என்பது சட்டத்தின்படி குற்றமாகும். தற்போது, சட்டத்தை காக்க வேண்டிய தலைமை காவலரே சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட கள்ளை அருந்துவது போன்ற செயலில் ஈடுபட்டது குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளது.
மேலும் படிக்க: தவெக ஆட்சியில் 48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள்.. முதல்வர் ஜோசப் விஜய் ப்ரோ! நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!