சிங்கப்பெண்கள் படை இருந்தும் பாலியல் வன்கொடுமை? ரீல்ஸ் ஆர்வத்தை முதல்வர் ரியலில் காட்ட வேண்டும்.. சீமான் அட்டாக்!
NTK Seeman criticized CM Vijay : தமிழகத்தில் சிங்கப்பெண்கள் படை இருந்தும் திருள்ளூரில் பாலியல் கொலை நிகழ்ந்துள்ளது. முதல்வர் ரீல்ஸ் இல் காட்டும் ஆர்வத்தை போதை பொருள் ஒழிப்பில் காட்ட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை வட மாநில தொழிலாளரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வு இதயத்தை நொறுக்குகிறது. பெற்ற குழந்தையை பறிகொடுத்து பெரும் இழப்பால் தவிக்கும் பெற்றோருக்கு என்ன வார்த்தைகள் கூறினாலும் அந்த காயத்தை ஆற்ற முடியாது. தமிழக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறிதும் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழகம் உருவெடுத்து இருப்பது வேதனையின் உச்சமாகும். தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு என்ற ஒன்று இருக்கிறதா. ஆட்சி என்ற ஒன்று நடக்கிறதா.
மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் எத்தனை குற்றத்தை தடுத்துள்ளார்
தமிழகத்தில் மாறுவேடத்தில் செல்லும் முதலமைச்சர் எத்தனை குற்றங்களை தடுத்துள்ளார். இதில், எடுத்த நடவடிக்கைகள் எத்தனை. ? தமிழக அரசின் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிகரிப்படை என்ன செய்து கொண்டிருக்கிறது. தமிழக காவல்துறை தற்போதும் திரைப்பட பாடலுக்கு இசை வாசித்துக் கொண்டிருக்கிறதா. காவல்துறையே தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் பெண்கள் பாதுகாப்பிலும், போதை பொருட்கள் ஒழிப்பிலும் அலட்சியம் காட்டுவது பெரும் ஆபத்தானதாகும். அனைத்து குற்றச்சம்பங்களுக்கும் காரணமான போதை பொருளை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன.
மேலும் படிக்க: தவெக ஆட்சியில் 48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமைகள்.. முதல்வர் ஜோசப் விஜய் ப்ரோ! நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!




வாகனத்தை ஓட்டி ரீல்ஸ் வெளியிடுவதில் முதல்வர் ஆர்வம்
வாகனத்தை ஓட்டி ரீல்ஸ் வெளியிடுவதில் அதிக கவனம் காட்டும் முதல்வர் போதைப்பொருள் ஒழிப்பில் அத்தகைய ஆர்வத்தையும் வேகத்தையும் காட்டுவதில்லை. போதைப்பொருள் ஒழிப்பை முதல்வர் தன்னுடைய அரசிடம் இருந்து தொடங்க வேண்டும். புதிய டாஸ்மாக் பார்களை திறந்து போதைப் பொருளை ஒழிக்கப் போவதாக கூறுவது வெட்கக்கேடானது. கடந்த திமுக ஆட்சியில் இதே கும்மிடிப்பூண்டியில் 10 வயது சிறுமி பீகார் மாநிலத்தை சேர்ந்த அவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
பாலியல் குற்றங்களில் மரண தண்டனையை தீர்வாகும்
இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தமிழகத்துக்கு புலம்பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் வருகை மற்றும் இருப்பு குறித்து முறையான ஆவண பதிவு அவசியம் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அப்போதைய திமுக அரசும், தற்போதைய தவெக அரசும் வட மாநிலத்தவர் வருகை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தற்போதும் இந்த வன்கொடுமை சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஏதும் அறியா பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்யும் அவர்களுக்கு விரைவான மரண தண்டனை அளிப்பது ஒன்றே தீர்வாகும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ வெற்றிக்கு எதிர்ப்பு.. திருப்பத்தூரில் மறு வாக்கு எண்ணிக்கை.. உயர்நீதிமன்றத்தில் பெரியகருப்பன் மனு தாக்கல்!