பெரம்பலூரில் நள்ளிரவில் கோர விபத்து.. கார் – லாரி நேருக்கு நேர் மோதி 3 என்ஜினீயர்கள் துடிதுடித்து பலி!
Perambalur Accident 3 Dies: பெரம்பலூர் மாவட்டத்தில் கார் லாரி மோதிய கொடூர விபத்தில் ஒரே நிறுவனத்தில் பணி புரிந்து வந்த 3 என்ஜினீயர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாவட்டம், பெரம்பூரை சேர்ந்தவர் சங்கர் ( 37 வயது). இவர், சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இவருடன், இதே நிறுவனத்தில் அரியலூர் மாவட்டம், அரிசானத்தம் கிராமத்தை சேர்ந்த விஜய் ( 30 வயது), சன்னாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சக்தி ( 21 வயது) ஆகியோரும் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், மூன்று பேரும் நிறுவனத்தின் பணி காரணமாக கேரள மாநிலத்துக்கு சென்றனர். அங்கு, மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடித்துவிட்டு விஜய் மற்றும் சக்தி ஆகியோர் தங்களது சொந்த ஊரான அரியலூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து அவர்கள் சென்னை திரும்புவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதன்படி, 3 பேரும் கேரள மாநிலத்தில் இருந்து அரியலூருக்கு காரில் புறப்பட்டு சென்றனர். அவர்கள் இன்று திங்கள்கிழமை அதிகாலை பெரம்பலூர் மாவட்டம் அருகே சென்று கொண்டிருந்தனர்.
கனரக லாரியும் காரும் மோதி பயங்கர விபத்து
துறையூர் சாலையில் டி. களத்தூர் கிராமம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக சென்னையில் இருந்து துறையூர் நோக்கி கனரக லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஜலீல் பாஷா ஷேக் என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில், எதிர்பாராத விதமாக கனரக லாரியும், சங்கர் உள்ளிட்டோர் சென்ற காரும் கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
மேலும் படிக்க: தொடரும் ஆணவப் படுகொலைகள் – தவெக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை




காரின் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவர்
இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொருங்கியது. லாரியின் முன் பகுதி பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் சென்ற சங்கர் உள்ளிட்டோர் பலத்த காயமடைந்து காரின் இடுபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கிய நபர்களை மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
3 என்ஜினீயர்கள் உடல் நசுங்கி பலி
அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் சங்கர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற இருவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி விஜய் மற்றும் சக்தி ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிர் இழந்தனர். இதை தொடர்ந்து, அவர்களது சடலம் உடல் கூறாய்வு மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: இட்லி தட்டில் சிக்கிய விரல்.. வலியால் துடித்த சிறுவனை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!