காலியான 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடைக்கோரி அதிமுக மனு.. நாளை மறுநாள் விசாரணை..
இது தொடர்பான மனுவில், “சட்டசபையில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும் போது, அதனை தவிர்க்கும் வகையில் அவர்கள் ராஜினாமா செய்ததை ஏற்க முடியுமா என்ற அரசியல் சாசன கேள்வி எழுந்துள்ளது. எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டது கட்சி தாவல் தடைச் சட்டத்தையும் மக்கள் தீர்ப்பையும் கேள்விக்குறியாக்குகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் 15, 2026: தமிழகத்தில் காலியாக இருக்கக்கூடிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என, அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2026ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்று முடிந்த சூழலில், மே 4ஆம் தேதி அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவற்றின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது.
த.வெ.கவிற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்.எல்.ஏக்கள்:
ஆட்சி அமைக்கும் போது, தமிழ்நாடு ஆளுநர் மே 13ஆம் தேதிக்குள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்திருந்தார். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையிலான 25 அதிமுக எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதையடுத்து, அவர்களுக்கு எதிராக கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஜேசிபி பிரபாகரிடம் மனு அளித்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.
4 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா:
இந்த சூழலில், அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், தாராபுரம் தொகுதி எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அந்த ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அன்றைய தினமே ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்தபோது, அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அதன் தலைவர் மற்றும் எம்எல்ஏ ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் படிக்க: பரிதாபமாக உதிர்ந்த சிறுமி உயிர்.. கள்ளக்காதலுக்காக மகளை தீர்த்துக்கட்டிய பாசக்கார தாய்… நாடகம் அம்பலம்!
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்:
இது தொடர்பான மனுவில், “சட்டசபையில் கொறடா உத்தரவை மீறி வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும் போது, அதனை தவிர்க்கும் வகையில் அவர்கள் ராஜினாமா செய்ததை ஏற்க முடியுமா என்ற அரசியல் சாசன கேள்வி எழுந்துள்ளது. எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டது கட்சி தாவல் தடைச் சட்டத்தையும் மக்கள் தீர்ப்பையும் கேள்விக்குறியாக்குகிறது.
எனவே, எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், அவர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிமுக தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதம்:
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் ஆஜராகி, “இந்த வழக்கில் தங்களையும் இணைக்க வேண்டும். நான்கு அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்று, அந்த தொகுதிகள் காலியானதாக வெளியிடப்பட்ட அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு வரும் வரை சம்பந்தப்பட்ட நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கு இன்னும் எண் இடப்படவில்லை. எனவே, வழக்கிற்கு எண் இடப்பட்ட பிறகு அதனையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்” என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை நாளை மறுநாள் நடைபெறுமெனத் தள்ளிவைத்தனர்.