வெளியூர்காரன் என திட்டியதால் ஆத்திரம்.. தென்காசியில் தொழிலாளி கொடூரமாக அடித்து கொலை.. சக தொழிலாளி கைது!
Tenkasi Murder: தென்காசி மாவட்டத்தில் வாய்க்கால் பாலம் அருகே கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரியை சேர்ந்த உடன் வேலை பார்த்த சக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், தென்காசி நகர பகுதியான வாய்க்கால் பாலம் அருகே சுமார் 39 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த சடலத்தை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலை செய்யப்பட்டவர் தென்காசி வாய்க்கால் பாலம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பையா என்பவரின் மகன் முருகன் என்பதும், இவர், கட்டிட தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. மேலும், இவருக்கும், பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாப்பேரி பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் ஐயப்பன் ( 23 வயது) என்பவரும் கட்டிட தொழில் பார்த்து வந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் நண்பராக பழகி வந்துள்ளனர். ஐயப்பன் தற்போது, தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.
மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொடூர தாக்குதல்
இந்த நிலையில், ஐயப்பன் மற்றும் முருகன் ஆகியோர் தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் மது அருந்தி உள்ளனர். அப்போது, ஐயப்பனை வெளியூர் காரன் என்று முருகன் தகாத வார்த்தைகள் திட்டியதாக கூறப்படுகிறது. இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஒரு கட்டத்தில் மது போதையில் இருந்த இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி உள்ளனர். இதில், கடுமையான ஆத்திரம் அடந்த ஐயப்பன் கட்டிட பணிக்கு பயன்படுத்தும் இரும்பு கரண்டியால் முருகனை பலமாக தாக்கியுள்ளார்.
மேலும் படிக்க: 3 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. “சிங்கப்பெண் அதிரடிப்படை” எங்கே போனது?.. அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!!




கட்டிட வேலைக்கான கரண்டியால் தாக்கி கொலை
இதில், தலை மற்றும் முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயம் அடைந்த முருகன் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். இதை தொடர்ந்து, ஐயப்பன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதில், பலத்த ரத்த காயம் அடைந்து மயங்கி விழுந்த முருகன் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மறுநாள் காலையில் அந்த பகுதியாக சென்ற பொதுமக்கள் முருகன் படுகொலை செய்யப்பட்டு கிடந்தது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி இந்த கொலை சம்பவம் வெளியே தெரியவந்துள்ளது.
சக கட்டட தொழிலாளி கைது
இதைத் தொடர்ந்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஐயப்பனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அவர், தென்காசி பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஐயப்பனை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: கல்லூரி மாணவியை இன்ஸ்டாவில் மயக்கி ஆபாச வீடியோ எடுத்து மிரட்டல்.. 2 இளைஞர்கள் கைது.. கோவையில் பயங்கரம்!!